அர்ஜுனை நாடு கடத்தும் ஆவணங்கள் பரிசீலனை

மேல்நீதிமன்றில் மேலதிக சொலிசிட்டர் அறிவிப்பு

மத்திய வங்கி பிணைமுறிகள் மோசடியுடன் தொடர்புடைய முதலாவது பிரதிவாதியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக, சட்ட மா அதிபரால் மூன்றாவது தடவையாகவும் அனுப்பப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் விளக்கங்கள் சிங்கப்பூர் சட்ட மா அதிபரால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க நேற்று (18) கொழும்பு முதலாவது நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பிணை முறி மோசடி வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் முதலாவது பிரதிவாதியான முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைப்பது தொடர்பில் மூன்றாவது தடவையாகவும் சட்ட மாஅதிபர் சிங்கப்பூர் சட்ட மாஅதிபருக்கு அறிவித்துள்ளார்.

அதற்கான ஆவணங்களை மூன்றாவது தடவையாகவும் சிங்கப்பூர் சட்ட மாஅதிபருக்கு எமது சட்ட மாஅதிபர் அனுப்பியுள்ளதுடன் அதனை சிங்கப்பூர் சட்ட மாஅதிபர் கவனத்திற் கொண்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் முதலாவது நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் குழு முன்னிலையில் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்ட மாஅதிபர் திணைக்களம் மேற்படி தகவலை நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

சம்பா ஜானகி ராஜரத்ன, தமித்தொடவத்த மற்றும் நாமல் பளல்லே ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்றைய தினம் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாலிந்த ரணசிங்க மேற்படி தகவல்களை முன்வைத்தார்.

2015 பெப்ரவரி 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிணை முறி விநியோகத்தின் போது 600 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தற்போது மலேசியாவில் தங்கியுள்ள மேற்படி வழக்கின் பத்தாவது பிரதிவாதியான பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் அஜாத் கார்டியா புஞ்சி ஹேவாவை இலங்கைக்கு வரவழைப்பதற்கான பிடியாணையை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக மலேசியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு சமர்ப்பித்துள்ளது என அவர் நேற்று நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்துடன் மேலுமொரு குற்றப்பத்திரம் இணைக்கப்பட்டு, திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் நாயகம் ஹரிபிரியா ஜயசுந்தர மன்றில் அறிவித்தார்.

இதனடிப்படையில், அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அஜாத் கார்டியா புஞ்சிஹேவா ஆகிய பிரதிவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிப்பதற்காக, வழக்கு எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 03/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை