சாணக்கியமாக செயற்பட்டால் எக்காரியத்தையும் சாதிக்கலாம்

சடலங்கள் அடக்கம் குறித்து நஸீர் அஹமட் அறிக்கை

ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் மனதில் கறுப்புப் புள்ளியாக பதியப்பட்டிருந்த விடயம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. எனவே இதில் ஒரு அங்கமாக சிறுபான்மையினரான முஸ்லிம்கள் எவ்வாறு ஒரு பெரும்பான்மையினத்துடன் வாழ்வது என்பதைக்கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மரணித்தவர்கள் எனக் கூறப்படுபவர்களின் சடலங்களின் நல்லடக்கத்துக்கு மட்டக்களப்பு பிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நாங்கள் சாணக்கியமான அணுகுமுறைகளை மேற்கொண்டு எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியுமென்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

விடாப்பிடியான அல்லது தீவிரவாத போக்குகளை நாம் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்கின்ற ஒரு புதுவிதமான அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதைப்பற்றி சிறுபான்மையினர் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

சிறுபான்மையினக்கெதிரான கெடுபிடிகளை, நெருக்கடிகளை புறக்கணிப்புக்களை எப்படி வெல்வது அல்லது தோற்கடிப்பது என்பதுபற்றி அவசியம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு காய்நகர்த்தல்களைச் செய்து நாங்கள் இவற்றைக் கடந்து செல்ல வேண்டும்.

எனது அரசியல் வாழ்க்கையில் கடந்த நான்கு மாதங்கள் மிகவும் கனதி மிக்கதாக இருந்தது.

அரசியல் யாப்பின் இருபதுக்கு வாக்களித்தமை மற்றும் கோவிட்19 வைரஸ் தொற்று மரணங்களில் முஸ்லிம்களின் சடலங்கள் எரிப்பு விவகாரம் என்பன பேசுபொருளாகி விட்டது.

அதனை வைத்தே அரசியல் அறிவில்லாத உலுத்தர்கள் அரசியல் செய்யத் தொடங்கி விட்டனர். நாங்கள் உறக்கமின்றி ஓடித் திரிந்து அடிமட்டத்திலிருந்து அதிகாரத்தின் அதியுயர் மட்டம் வரை தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்து வந்தோம்.

வெள்ளிக்கிழை சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கூட கடந்த டிசம்பெர் மாதம் நாமே அரசாங்கத்துக்கு தெரிவு செய்து கொடுத்திருந்தோம்.

இவையெல்லாம் திரை மறைவில் அழுத்தமாக, ஆதாரமாக, நுணுக்கமாக காய்நகர்த்தி அரசின் அனுசரணையோடு மேற்கொண்ட நடவடிக்கைகள். இவற்றுக்கான எழுத்து மூலமான ஆதாரங்கள் எம்மிடமுள்ளன.

எனவே இதில் வீணர்களின் கொக்கரிப்புக்களை நாங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை.

Wed, 03/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை