உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்; விசாரணை அறிக்கையை பொறுப்பேற்க முடியாமை ஏன்?

- ஐ.தே.கட்சி கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான  ஜனாதிபதி ஆணைக்குழுவின்  விசாரணை அறிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது எனில் கடந்த இரண்டு வருடங்களாக யாருடைய தேவைக்கு  அரசாங்கம் ஆணைக்குழு முன்னெடுத்தது என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கேள்வியெழுப்பினார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை அரசாங்கத்துக்கு பொறுப்பேற்க முடியாது எனவும் அது நல்லாட்சி  அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட  ஆணைக்குழு  எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்திருந்தார்.

ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கத்துக்கு பொறுப்பேற்க முடியாது எனில், எதற்காக கடந்த இரண்டு வருடங்களாக ஆணைக்குழுவை விசாரணைக்கு அனுமதித்தது என கேட்கின்றோம்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான  இரண்டு இடைக்கால அறிக்கைகளை ஜனாதிபதி, ஆணைக்குழுவிடமிருந்து பொறுப்பேற்றிருந்தார். இந்த ஆணைக்குழுவுக்காக அரசாங்கமே நிதி செலவழித்தது.

ஆணைக்குழுவின் அறிக்கையை பொறுப்பேற்க முடியாது எனில், யாருடைய தேவைக்கு அதற்காக  பணம் செலவழித்தது?. நல்லாட்சி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு என்பதற்காக இதனை பொறுப்பேற்க முடியாது என்றால், நல்லாட்சி அரசாங்கத்தில் அமைக்கப்பட்ட   டயர் கம்பனி, மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் போன்ற அனைத்து வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்க கூடாது.

அத்துடன் விசாரணையின் போது ஒருசில விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்த முடியாமல் போனதாக ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. இரண்டு வருடங்களாக விசாரணை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்து, இவ்வாறு தெரிவிப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 03/04/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை