பெருந்தோட்டத் தொழிலாளருக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளம்

அடிப்படை சம்பளம் 900; பட்ஜட் கொடுப்பனவு ரூ.100

இ.தொ.காவின்  கோரிக்கையை  ஏற்றது சம்பள  நிர்ணய சபை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக வழங்க நேற்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இ.தொ.கா முன்வைத்த 900 ரூபாய் அடிப்படைச் சம்பளமாகவும் 100 ரூபாய் பட்ஜட் கொடுப்பனவுமாக இணைத்து, ஆயிரம் ரூபாயை வழங்க இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், தொழில் அமைச்சில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே, இவ்வாறு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1000 ரூபா சம்பள விடயத்தில் கோரிக்கையொன்றை முன்வைத்து அதனை சம்பள நிர்ணயசபை பரிசீலனை செய்து ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

இதன்போது அரசாங்கம் தரப்பில் 3 பேரும் தொழிற்சங்கம் சார்பாக 8 பேரும் தோட்ட கம்பனிசார்பாக 8 பேரும் கலந்துக்கொண்டனர். இதன்போது தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தீர்மானித்தபடி 900 ரூபா அடிப்படை சம்பளம் மற்றும் நூறு ரூபா வரவு செலவுத்திட்ட கொடுப்பனவு என ஆயிரம் ரூபாவாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவதற்கு தொழில் ஆணையாளர் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதன்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு ஏற்கனவே சம்பள நிர்ணய சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு நேற்றும் முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்பை வெளியிட்டது. எனினும் தொழிற்சங்கங்கள் மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவளித்தன.அதனையடுத்து சம்பள அதிகரிப்பு தொடர்பில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக் கொண்ட தொழில் ஆணையாளர், அடிப்படைச் சம்பளம் 900 ரூபாய் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 100 ரூபாய் என்ற வகையில் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார்.

-லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 03/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை