முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் இம்ரான் கான்

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் இம்ரான் கான்-Imran Khan Will Meet Sri Lankan Muslim MPs

"பலவந்த ஜனாஸா எரிப்பு தொடர்பில் பேசப்படும்" - ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு

இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (24) அவரது விடுதியில் சந்திப்பதற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆயிஷா அபூபக்கர் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 

 

இச்சந்திப்பின்போது பலவந்த ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான்கானுக்கு தெளிவுபடுத்தவுள்ளனர்.

இதேவேளை, ரஊப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம் எம்.பிக்களுடனான சந்திப்பை அரசாங்கம் தவிர்த்தமை தொடர்பில் நேற்று (23) கருத்துத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் நிகழ்ச்சி நிரலானது இருதரப்பு இராஜதந்திர குழுக்களாலேயே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் தனிப்பட்ட ரீதியில் நபர்களை தேர்ந்தெடுத்து சந்திப்புக்களுக்கான ஏற்பாடு செய்யப்படுவதில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நிகழ்ச்சி நிரல்

நேற்று
- பி.ப. 4.15: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் வரவேற்பு
- பி.ப. 6.00: அலரி மாளிகையில் கலந்துரையாடல்
- பி.ப. 6.30: மணிக்கு கூட்டு ஊடக வெளியீடு

இன்று
- மு.ப. 10.30: ஜனாதிபதியுடன் சந்திப்பு
- மு.ப. 11.30: வர்த்தக, முதலீட்டு மாநாடு - ஷங்ரி லா
- பி.ப. 12.30: சபாநாயகர், விளையாட்டு அமைச்சர் பகல் போசணம்
- பி.ப. 12.30: நாவல கிரிமண்டல வீதியில் உயர்தர விளையாட்டு நிலையம் நிர்மாணம் தொடர்பில் பேச்சுவார்த்தை - ஷங்ரி லா
(முஸ்லிம் எம்.பிக்களுடன் சந்திப்பு)
- பி.ப. 3.00: விமான நிலையத்தில் விடைபெறுவார்

Wed, 02/24/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை