வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் நாளை தீச்சட்டிப் போர்

04 ஆண்டுகள் நிறைவில் கிளிநொச்சியில் நடத்த அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளை 20ஆம் திகதி சனிக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ள தீச்சட்டி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர் சந்திப்பு கிளிநொச்சி ஊடக அமையத்தில் நடைபெற்றது.

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து 20ஆம் திகதி 04 ஆண்டுகள் நிறைவடைகிறது. அன்றைய தினம் தீச்சட்டி போராட்டமாக முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி மேலும் தெரிவிக்கையில்,

உண்மைக்கும் நீதிக்குமான இப் போராட்டம் சர்வதேசத்தின் ஊடாக நீதியை பெற்றுக்கொள்வதற்காக தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம். எங்களுடைய உறவுகள் எமக்கு கிடைக்கும் வரையும், அவர்களுக்கான நீதி கிடைக்கும் வரையிலும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை. நாளை 20 ஆம் திகதி வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் உறவுகளும் எமக்கு பலம் சேர்க்க வேண்டும். அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கிராம மட்ட அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து கழகங்கள், அரசியல் பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் நாளைய தினம் நடைபெறவுள்ள தீச்சட்டி பேரணியில் கலந்துகொண்டு எங்களுக்கான நீதி கிடைக்க வலு சேர்க்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த தீச்சட்டி பேரணி கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலை சென்றடையும். இந்த போராட்டம் எமக்ககான நீதியை சர்வதேசம் பெற்று தருவதற்காக சர்வதேசத்திலுள்ள அனைவரினது நெஞ்சங்களிலும் பதியப்பட வேண்டும்.

எமது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்களும், எமக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று எண்ணுகின்ற அனைவரும் 20ஆம் திகதி காலை 09 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பேரணியில் கலந்து கொண்டு எமக்கு வலுச் சேர்க்க வேண்டும் என அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

கிளிநொச்சி குறூப் நிருபர் 

Fri, 02/19/2021 - 07:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை