இம்ரான் கானின் உரை இரத்து; ஹரீஸ் எம்.பிக்கு ஏமாற்றம்

விசேட ஊடக அறிக்கையில் தகவல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பாராளுமன்ற உரை இரத்துச் செய்யப்பட்டது ஏமாற்றமாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள எண்ணியுள்ள பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான்கானின் விஜயத்தின் போது இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென அவரது பாராளுமன்ற உரை இரத்துச் செய்யப்பட்டது ஜனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கைக்கு எதிரான செயலாகவே பார்க்க முடிகிறது. இம்ரான்கானின் இலங்கை பாராளுமன்ற விசேட உரையில் அவர் எந்த விடயங்களை பேசப்போகிறாரென இலங்கை மக்கள் மட்டுமல்லாது சர்வதேசமே உன்னிப்பாக நோக்கிக் கொண்டிருந்த இந்த சூழ்நிலையில் அவரின் உரை இரத்துச் செய்யப்பட்ட செய்தி வெளியாகியுள்ளமை பலத்த ஏமாற்றத்தையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது.

இலங்கையின் நட்பு நாடுகளில் முதன்மையான சர்வதேச ஒற்றுமையை வலியுறுத்தி தனது அரசியலை முன்னெடுக்கும் பாகிஸ்தானிய பிரதமருக்கு இவ்வாறான தர்மசங்கட நிலையை உருவாக்கி அவமானத்தை உண்டாக்கியுள்ள இந்த செயற்பாடானது இலங்கை அரசாங்க இராஜதந்திர போக்கின் தொய்வு நிலையை காட்டுகிறது.

ஜனநாயக வலிமை, நீதி, நியாயத்தை வலியுறுத்தல் உட்பட இலங்கையின் பல்லின மக்களின் பிரச்சினைகளை இலங்கை பாராளுமன்றத்தில் பேசி இலங்கை அரசாங்கத்துக்கு வேண்டுகோளை முன்வைப்பாரென இலங்கை சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கை பரவியிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கமும், சபாநாயகரும் மீள் ஆலோசனை செய்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கை பாராளுமன்ற உரையை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Fri, 02/19/2021 - 07:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை