மியன்மார் மீது புதிய தடைகள்; ஜோ பைடன் எச்சரிக்கை

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் மீதான தடைகளை மீண்டும் கொண்டுவருவது பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மியன்மாரில் பல தசாப்தங்கள் நீடித்த இராணுவ சர்வாதிகார ஆட்சியில் இருந்து அந்நாடு வெளியேற ஆரம்பித்த பின் அண்மையிலேயே தடைகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் ஆளும் கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி மற்றும் மூத்த உறுப்பினர்கள் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். சூச்சின் ஆளும் கட்சி அண்மைய தேர்தலில் அமோக வெற்றியீட்டிய நிலையில் அந்தத் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதற்கு ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

1989 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்கு இடையே சுமார் 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த சூச்சி, தாம் கைது செய்யப்படும் முன்னர் “இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக போராடும்படி” மக்களுக்கு அழைப்பு விடுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்திருக்கும் இராணுவம் நாட்டில் ஓர் ஆண்டு காலத்திற்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. ஏற்கனவே நிதி, சுகாதாரம், உள்துறை மற்றும் வெளியுறவு உட்பட 11 அமைச்சர்களை மாற்றியுள்ளது. இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பைடன் கூறியிருப்பதாவது, “மக்களின் விருப்பு அல்லது நம்பகமான தேர்தல் முடிவை அழிக்கும் முயற்சியில் இராணுவம் ஈடுபடக்கூடாது” என்றார்.

மியன்மார் கடந்த தசாப்தத்தில் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய நிலையில் அந்நாட்டின் மீதான அமெரிக்காவின் தடைகள் அகற்றப்பட்டன. இதனை மீளாய்வு செய்ய வலியுறுத்தி இருக்கும் பைடன், “எங்காவது நெருக்கடிக்கு முகம்கொடுக்கு ஜனநாயகத்தின் பக்கம் அமெரிக்கா நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பைடனின் இந்த எச்சரிக்கை மியன்மார் இராணுவத்தின் செயற்பாட்டில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாகக் கூற முடியாதிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் நாட்டில் ஓராண்டு காலத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள அவசர நிலையின்போது உண்மையான, ஒழுக்கமான, பல அரசியல் கட்சிகளைக் கொண்ட ஜனநாயக முறையை அமைக்க, மூத்த ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லாயிங் உறுதியளித்துள்ளார்.

நியாயமான, ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தி, வெற்றி பெறும் கட்சியிடம் பொறுப்பை ஒப்படைக்கவிருப்பதாக அவர் கூறினார். ஆனால் அதற்கான கால வரம்பை அவர் குறிப்பிடவில்லை.

ஜெனரல் மின் ஆங் ஹ்லாயிங், மியன்மாரின் அரசுரிமை விவகாரங்களில் தலையிட, ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட ஆங் சான் சூச்சி மற்றும் அவரது கூட்டாளிகள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியாதுள்ளது.

சூச்சி மற்றும் ஜனாதிபதி வின் மியின்ட் இருவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவரது கட்சி தரப்புகள் தெரிவித்துள்ளன.

இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக சூச்சி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தபோதும், வீதிகளில் நேற்றும் அமைதி நிலவியது. அனைத்து பிரதான நகரங்களிலும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டதோடு இரவு நேர ஊடரங்கு உத்தரவும் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே தலைநகர் நேப்டாவ் உள்ளிட்ட நகரங்களை இராணுவம் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. நகர வீதிகளில் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, இராணுவ ஆயுத வண்டிகள் ரோந்து வந்த வண்ணம் உள்ளன.

முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதள, தொலைபேசி சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், யங்கூன் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து மூடியே உள்ளது.

பிரபல புத்த துறவி ஷ்வே நியா வார் சதாயத்வா–வையும் இராணுவம் கைது செய்துள்ளதால், பெரும்பான்மையாக உள்ள புத்த மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Wed, 02/03/2021 - 11:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை