மாகாண சபை வாய்ப்பை தவறவிட்டமை பெருந்தவறு

- தமிழருக்கு இலங்கை – இந்திய ஒப்பந்தம் மூலமான அரிய சந்தர்ப்பம்
- தமிழ்க் கூட்டமைப்பு, விக்கினேஸ்வரன் மீது EPDP பகிரங்க குற்றச்சாட்டு

தமிழ் மக்களுக்கு இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த மாகாண சபை என்ற அருமையான வாய்ப்பை நீதியரசர் விக்கினேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தவறவிட்டமையே, தற்போது மாகாணசபை பற்றிய விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளதென இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் ஃபேர்கலரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் விஷேட பிரதிநிதிகளை இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புதிதாக பதவியேற்றுள்ள சுவிற்ஸர்லாந்து தூதுவர் வடக்கிற்கான முதலாவது பயணத்தை நேற்று மேற்கொண்டிருந்தார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் (18) இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் கடற்றொழில் அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகரும் வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சின்னத்துரை தவராசா மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்
திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட பிரதிநிதிகளால் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...-

13 ஆவது திருத்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு ஏறத்தாள 27 வருடங்களுக்கு பின்னரே வடக்கு கிழக்கிற்கான மாகாணசபை தேர்தல் நடைபெற்றது. இந்த இடைவெளியால் மாகாணசபைக்கான அதிகார ஏற்பாடுகள் சில மத்திமயப்படுத்தப்பட நேரிட்டுள்ளது.

ஆனாலும் இதை மாற்றியமைக்க தமிழ் மக்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் 2013 ஆம் ஆண்டு நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் கிடைத்தது. மக்களை உசுப்பேற்றி வாக்குகளை அபகரித்து மாகாணசபையை கைப்பற்றியிருந்தனர். ஆனால் எதையும் செய்யாது காலத்தை வீணடித்தவிட்டு இன்று கதையளந்து வருகின்றனர்.

குறிப்பாக அன்று சுவிஸ் அரசு கூட மாகாணசபை நியதிச் சட்டங்களை ஆக்கக் கூறி நிதியுதவியும் வழங்கியிருந்தது. நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதிலும் அதை முன்னெடுக்குமாறு பல தடவைகள் வலியுறுத்தியிருந்தேன். ஆனாலும் நீதியரசர் விக்கினேஸ்வரன் அதில் எந்தவித அக்கறையும் எடுக்கவில்லை. 13 இல் இருக்கும் இவ்வாறான பலவற்றை நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. ஆனால் இன்று நாம் நீதியரசர் விட்ட அந்த குறைகளையும் சேர்த்தே முன்னெடுக் வேண்டியுள்ளது.

அதேபோல மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சுவிஸ் தூதுவருக்கு சுட்டிக்காட்டும் போது– நீதி ஒன்று தேவைதான். ஆனால் அதை மட்டும் வலியுறுத்திக் கொண்டிருக்காது எமது மக்களதும் நாட்டினதும் அபிவிருத்தி உள்ளிட்ட ஏனைய விடயங்களையும் முன்னோக்கிக் கொண்டுசெல்ல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

மனித உரிமை விடயத்தில் இரண்டு பக்கத்திலும் தவறுகள் இருக்கின்றது. அதேபோல இரண்டு பக்கமும் தீவிர போக்குள்ளவர்கள் இருக்கின்றனர். குறிப்பாக ஐ.நா சபையால் அமைக்கப்பட்ட குழுவான “தருஸ்மன்” புலம்பெயர் சேதத்திலுள்ள தமிழர்களையும் குற்றம்சாட்டியிருந்தது. அந்தவகையில் இது நடைமுறை சாத்தியமானதா? ஆனாலும் இதற்கு நீதி ஒன்றுவேண்டும்.

ஜனாதிபதியால் தற்போது இது தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பரிந்துரைகளை தனி ஒரு நபர் எடுக்க முடியாது. அத்துடன் இந்த ஆணைக்குழு இன்னமும் கூடி ஆராயவில்லை. அதன்போது இது தொடர்பில் விரிவாக ஆராயப்படும். இதன்போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியுள்ள சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதா என்றும் அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அவற்றை இனங்கண்டு அதை முன்னெடுப்பது தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்படும்.

எது எவ்வாறானாலும் இலங்கை நாட்டில் அனைவரும் பேதங்களற்ற வகையில் சமாதானமாகவும் சமத்துவமாகவும் வாழவேண்டும் என்பதையே நாம் அக்கறை கொள்ள வேண்டும். அதேபோல நாட்டில் மக்கள் அனைவரும் சமாதானமாக ஐக்கியத்துடன் வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இறுதியாக கிடைத்த பொன்னான வாய்ப்பான வடமாகாண சபையின் 05 வருடங்களை நீதியரசர் விக்னேஸ்வரன் இழக்கச் செய்துவிட்டார்.

ஆனால் 13 ஆவது திருத்த சட்டமே சிறந்து என்றும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றுவரை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார். அன்று தும்புத்தடியால் கூட தொடமாட்டோம் என்றவர்கள் இன்று அதையே பெற்றுக்கொள்ள வேண்டுமென கூறத் தொடங்கியுள்ளதுடன் அதை காப்பாற்றுமாறு எங்களிடமே கூறுகின்றனர்.

அந்த வகையில் ஒரு சில தினங்களில் இது தொடர்பான அரசியலமைப்புக் குழுவை எமது கட்சி சந்திக்கவுள்ளது. அதில் இது தொடர்பில் நாம் வலியுறுத்தவுள்ளோமென்றும் தெரிவித்துள்ளார்.

Fri, 02/19/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை