இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி, பிரதமரை சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி, பிரதமரை சந்திப்பு-Indian High Commissioner Gopal Baglay Meets SL President-Prime Minister

- கொழும்பு துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் வலியுறுத்தி கலந்துரையாடல்
- தி ஹிந்து செய்தி வெளியீடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்துள்ளதாக, இந்திய செய்தி நிறுவனமான, தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக விடுத்த அறிவிப்பை அடுத்து இச்சந்திப்பு இடம்பெற்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லே நேற்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு முனையத்தை  அபிவிருத்தி செய்வது தொடர்பாக 2019ம் ஆண்டு மே மாதம் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை மதித்துச் செயற்படவேண்டும் என்பதே இந்தச் சந்திப்புக்களின் போது இந்தியத்தூதுவர் வலியுறுத்திய செய்தியின் சாராம்சமாகும் என தி ஹிந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை 51% சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் அதேவேளை இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக 49 % சதவீதமான பங்குகளைக் கொண்டிருக்கும்.

இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனமும் ஜப்பானிய நிறுவனங்களும் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான முதலீட்டை மேற்கொள்வார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை , கிழக்கு முனையம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இதுவரை இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்திருந்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 100 வீதம் துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் முன்னெடுக்கப்படும் என இலங்கை பிரதமர் அறிவித்திருந்தார்.  அதனைத்தொடர்ந்து அமைச்சரவைப் பத்திரமும் இதுதொடர்பில் சமர்பிக்கப்பட்டு கிழக்கு கொள்கலன் முனையத்தை  100 % இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்வதென தீர்மானிக்கப்பட்டதோடு, மேற்கு கொள்கலன் முனையத்தை 35 வருட குத்தகையின் கீழ் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணண்நது அபிவிருத்தி செய்ய இதன்போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 02/03/2021 - 12:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை