சுதந்திரத்தின் பின்னர் இலங்கை சந்தித்த அபிவிருத்திப் புரட்சி

73ஆவது சுதந்திர தினம்

நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் இலங்கை துரிதமான முன்னேற்றம்

இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கை மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்டதொரு நாடாகும். இதனை வரலாற்று பதிவுகளும் கல்வெட்டுக்களும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

தெற்காசியப் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் இந்நாடு தனக்கென தனித்துவமான சமூக, கலாசார விழுமியங்களைக் கொண்டிருக்கின்றது. அவற்றில் நீர்ப்பாசன விவசாயக் கலாசாரம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது. அதுவும் இந்நாட்டுக்கே உரிய உயர் தரத்திலான தனித்துவ தொழில்நுட்பத்துடன் கூடிய நீர்ப்பாசன கலாசாரம் இங்கு காணப்பட்டிருக்கின்றது. அதுவே இந்நாட்டின் அடிப்படை ஆதாரமாக உள்ளது.

அதன் காரணத்தினால் இந்நாட்டை ஆரம்ப காலம் முதல் ஆட்சி செய்த மன்னர்கள் விவசாயப் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவதில் அதிக கவனம் செலுத்தி செயற்பட்டு வந்துள்ளனர். அதன் விளைவாகவே இந்நாட்டில் குளங்களும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளும் அதிகளவில் கட்டியெழுப்ப ப்பட்டிருக்கின்றன.

இதன் பயனாக முன்னொரு காலத்தில் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடாக விளங்கிய இலங்கை அக்காலப் பகுதியில் அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாகவும் விளங்கியுள்ளது. இதன் விளைவாக தெற்காசியாவின் நெற்களஞ்சியம் எனவும் இந்நாடு அழைக்கப்பட்டது.

இந்நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் நாட்டை விவசாய பொருளாதாரத் துறையில் முன்னேற்றுவதில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ள போதிலும், இந்நாடு அவ்வப்போது வெளிநாட்டு படையெடுப்புகளுக்கு முகம் கொடுக்கவே செய்தது. அப்படையெடுப்புகள் அவ்வப்போது முறியடிக்கப்பட்டு நாட்டின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட்டது.

இந்நிலையில் கி.பி. 1505 இல் நாட்டுக்குள் வந்து சேர்ந்த போர்த்துக்கேயர், ஐரோப்பியரின் ஆக்கிரமிப்பை இந்நாட்டில் தொடக்கி வைத்தனர். இந்நாட்டின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர், அப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்கு பல்வேறு விதமான நெருக்குவாரங்களையும் துன்புறுத்தல்களையும் ஏற்படுத்தி வந்தனர். போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உள்நாட்டு மன்னர்கள் படைதிரட்டி போர்களை மேற்கொண்டனர். எனினும் அவர்களது ஆக்கிரமிப்பு நீடிக்கவே செய்ததோடு அவர்களுக்கு ஒத்துழைக்காத கரையோர பிரதேச மக்கள் இருப்பிடங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களது சொத்து, செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டு சூறையாடப்பட்டன.

இவ்வாறு போர்த்துக்கேயரின் அடாவடித்தனங்கள் சுமார் 100 வருடங்களுக்கும் மேல் நீடித்துக் கொண்டிருந்த சூழலில், ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடமிருந்து இந்நாட்டின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றினர். அவர்களுக்கு எதிராகவும் உள்நாட்டு மன்னர்கள் அவ்வப்போது படை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். போர்த்துக்கேயரைப் போன்று ஒல்லாந்தரும் தமக்கு ஒத்துழைக்காத மக்களுக்கு பலவிதமான நெருக்கடிகளையும் துன்பங்களையும் இழைத்தனர்.

அதன் பின்னர் 1796 இல் பிரித்தானியர் இந்நாட்டில் ஒல்லாந்தரின் ஆக்கிரமிப்பிலிருந்த கரையோரப் பிரதேசங்களை முதலில் கைப்பற்றினர். அவர்கள் கண்டி இராச்சியத்தையும் கைப்பற்றி முழு இலங்கையையும் தம் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வருவதில் குறியாகச் செயற்பட்டனர். இதன் ஒரங்கமாக கிழக்கு மாகாணத்தின் ஊடாக பெரும் படை நடவடிக்கையை கண்டியை நோக்கி முன்னெடுக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் மூதூர், சம்மாந்துறை, பாலமுனை உள்ளிட்ட கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு, ஒந்தாச்சிமடம் என்ற இடத்தில் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன் விளைவாக கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் முயற்சியில் பத்து வருடங்களுக்கும் மேற்பட்ட பின்னடைவு பிரித்தானியருக்கு ஏற்பட்டது. அதனால் இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தேசத் துரோகிகள் என வர்த்தமானியில் அறிவித்தனர்.

1815 இல் இடம்பெற்ற கண்டி ஒப்பந்தத்தோடு இலங்கை முழுவதும் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்தது. அதன் விளைவாக உள்நாட்டு சமூக, கலாசார பாரம்பரியங்களிலும் வாழ்க்கை முறைமைகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. பாரம்பரிய விவசாயப் பொருளாதார நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இவற்றுக்கு எதிராக உள்நாட்டு மக்கள் 1817 - 1818 இல் ஊவா பிரதேசத்தைக் கேந்திர மையமாகக் கொண்டு கிளர்ச்சி செய்தனர். அதுவே ‘ஊவா வெல்லஸ்ஸ’ கிளர்ச்சி என அழைக்கப்படுகின்றது. இலங்கையின் முதலாவது சுதந்திரப் போராட்டமாக விளங்குவதும் இதுவேயாகும். இப்போராட்டம் கலகமெனக் குறிப்பிட்டு பிரித்தானியர் கொடுங்கரங்கள் கொண்டு அடக்கினர்.

அதன் பின்னர் 1848 இல் மாத்தளையை அடிப்படையாகக் கொண்டு மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. அதுவே ‘மாத்தளை கிளர்ச்சி’ என அடையாளப்படுத்தப்படுகின்றது. இந்நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக மாத்தளை கிளர்ச்சி விளங்குகின்றது.

ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இந்த இரு போராட்டங்களையும் கலகங்கள் என் குறிப்பிட்டு மிக மோசமான முறையில் அடக்கியொடுக்கியதோடு, அப்போராட்டங்களில் முன்னணி வகித்தவர்களின் கிராமங்களையும் தாக்கி அழித்தனர். ஆனால் இந்நாட்டு மக்களின் சுதந்திரத் தாகமும் தேசப்பற்றும் மங்கி விடவில்லை.

இதேவேளை, 19 ஆம் நுற்றாண்டின் இறுதிப் பகுதி முதல் உள்நாட்டில் ஆங்கிலம் படித்தவர்களும் சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் நிலைமை உருவானது. இதே காலப் பகுதியில் உலகின் அதிகாரப் போக்கிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அத்தோடு உள்நாட்டில் ஆங்காங்கே பத்திரிகைகளும் தோற்றம் பெறலாயின. அவையும் சுதந்திரம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கின.

இவ்வாறான பின்புலத்தில் 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பமானது. அக்காலப் பகுதியில் சுதந்திரத் தாகம் மேலும் வேகமடைந்ததோடு அது மக்கள் மத்தியில் பரவலடையவும் வழிவகுத்தது. இக்காலப் பகுதியில் இலங்கை தேசிய சங்கம் போன்ற அமைப்புகளும் உருவாகின.

இந்நிலையில் 1921 இல் மனிங்க் அரசியல் சீர்திருத்தம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 1931 இல் டொனமுர் சீர்த்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, இந்நாட்டிற்கு வாக்குரிமையும் வழங்கப்பட்டது. இந்த அரசியல் சீர்திருத்தத்தின் ஊடாக அரச பிரதிநிதிகள் சபை முறைமையும் உருவாக்கப்பட்டது. அதன் ஊடாகவும் நாட்டின் சுதந்திரத்தை உள்நாட்டு பிரதிநிதிகள் வலியுறுத்தத் தொடங்கினர். இவ்வாறான சூழலில் 1945 இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற மசோதா அரச பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு இலங்கைக்கு ஜனநாயக ரீதியில் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அன்றைய தலைவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் சோல்பரி அரசியலமைப்பின் கீழ் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கைக்கு டொமியன் அந்தஸ்துடன் சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனாலும் கட்டுநாயக்காவிலும் திருகோணமலைத் துறைமுகத்திலும் சீனக்குடாவிலும் பிரித்தானிய படை முகாம்கள் தொடர்ந்தும் இருந்ததோடு அந்நாட்டு கொடியும் பறந்து கொண்டிருந்தது.

அதனால் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாநாயக்க, டி.ஏ. ராஜபக்‌ஷ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கப் பெற வேண்டும் என சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகித்தபடி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தனர்.

இதேவேளை, மறைந்த பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா நாட்டின் பாரம்பரிய நீர்ப்பாசன விவசாயப் பொருளாதாரத்தை மீளக் கட்டியழுப்புவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனால் 443 வருடங்கள் ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்ததால் இந்நாட்டில் பாரம்பரிய விவசாய, நீர்ப்பாசன தொழில்நுட்ப முறைமைகள் யாவும் அழித்து சிதைக்கப்பட்டிருந்தன. அவற்றை முழுமையாகக் கட்டியெழுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இது ஒரு தீவு நாடாக இருந்த போதிலும் இந்நாடு இயற்கை வளங்கள் நிரம்பிக் காணப்பட்டது. அவற்றை ஐரோப்பியர் தம் நாடுகளுக்கு கவர்ந்து சென்றிருந்தனர்.

1956 இல் பதவிக்கு வந்த மறைந்த பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாநாயக்கா இந்நாட்டிலிருந்த பிரித்தானிய முகாம்களை மூடி அந்நாட்டு கொடிகளையும் இறக்கி வைத்தார். இவ்வாறு இந்நாட்டின் சுதந்திரம் முழுமைப்படுத்தப்பட்டது.

இந்நாட்டில் சுதந்திரத்திற்கு பின்னர் பதவிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டின் தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடவும் அந்தந்த அரசாங்கங்களின் கட்சிகளது நலன்களுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்ப விவசாய பொருளாதாரத்தைக் கையாளத் தொடங்கின. அதாவது ஒரு அரசாங்கம் தேச நலன்களை முன்னிலைப்படுத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் போது மற்றொரு அரசாங்கம் கட்சி நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டது.

குறிப்பாக 1970 இல் பதவிக்கு வந்த மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க உள்நாட்டு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வகையில் மூடிய பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்தார். ஆனால் 1978 இல் பதவிக்கு வந்த மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி ஸ்ரீமாவோ பண்டாநாயக்கா 1970 முதல் கட்டியெழுப்பிய தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கான திட்டத்தை செல்லாக் காசாக்கினார். திறந்த பொருளாதார கொள்கையின் ஊடாக வெளிநாட்டு உற்பத்திகளின் சந்தையாக மாறியது இலங்கை. அதன் ஊடாக உள்நாட்டு உற்பத்தி துறையின் முதுகெலும்பு முறிந்தது.

இவ்வாறான நடவடிக்கைகளின் விளைவாக இந்நாடு சுதந்திரமடைந்து ஏழு தசாப்தங்கள் கடந்துள்ள போதிலும், ஐரோப்பியரின் ஆக்கிமிப்புக்கு முன்னரான தன்னிறைவு பொருளாதாரத்தை இன்னும் இந்நாட்டினால் அடைந்து கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இந்நாடு சுதந்திரமடையும் போது பொருளாதார ரீதியில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் தான் காணப்பட்டது.

ஆனால் இந்நாடு சுதந்திரமடையும் போது இந்நாட்டை விடவும் கீழ் மட்டத்தில் காணப்பட்ட பல ஆசிய நாடுகள் இலங்கையை விடவும் பல மடங்கு இப்போது வளர்ச்சி அடைந்து விட்டன.

ஆனாலும் கடந்த ஏழு தாசப்த காலப் பகுதியில் இலங்கையரின் எதிர்பார்க்கப்படும் உயிர் வாழும் கால எல்லை சுமார் 25 வருடங்களால் அதிகரித்திருக்கின்றது. எழுத்தறிவு 95 வீதம் வரை வளர்ச்சியடைந்திருக்கின்றது. போலியோ, மலேரியா, யானைக்கால் போன்ற நோய்கள் அற்ற நாடு என்ற பெருமையை இலங்கை அடைந்து கொண்டுள்ளது. அத்தோடு தாய் சேய் மரண வீதமும் பெரிதும் வீழ்சசியடைந்துள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்குகின்றது.

இந்நாடு சுதந்திரமடைந்து ஐந்து தசாப்தங்கள் கடந்த பின்னர்தான், அதாவது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர்தான் மற்றொரு சர்வதேச விமான நிலையத்தின் தேவை உணரப்பட்டு நிர்மாணிக்கப்பட்டு 2010 களில் தொடக்கி வைக்கப்பட்டது. சர்வதேச கடல் போக்குவரத்து பாதைக்கு அண்மையில் சர்வதேச துறைமுகமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைக்கவும், அதிக வேக நெடுஞ்சாலைகள், வீதி உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி நடவடிக்கைகள், மின்தேவையை நிறைவேற்றும் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் போன்ற பல்வேறு தேசிய அபிவிருத்தி திட்டங்களும் அவரது பதவிக் காலத்தில்தான் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பரந்தடிப்படையிலான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இதன் விளைவாக உள்நாட்டு உணவு உற்பத்தியில் இலங்கை மீண்டும் தன்னிறைவு அடைவதோடு ஏனைய உற்பத்தி துறைகளிலும் இந்நாடு துரித வளர்ச்சியை அடையும்.

ஆகவே இலங்கை வளர்முக நாடாக அன்றி வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை என உறுதிபடக் கூற முடியும். அதுவே நாட்டை உண்மையாக நேசிக்கும் ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்பும் அவாவுமாகும்.

மர்லின் மரிக்கார்

Thu, 02/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை