அமெ. விசாரணை அறிக்கையில் சவூதி முடிக்குரிய இளவரசர் மீது குற்றச்சாட்டு

2018ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலைக்கு சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க உளவுப் பிரிவினரின் இரகசிய விசாரணை ஒன்றில் தெரியவந்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த உளவுப் பிரிவு அறிக்கை அமெரிக்க நேரப்படி நேற்று வெளியிடப்படவிருந்தது.

சி.ஐ.ஏ உளவுப் பிரிவினரில் பங்களிப்புடனான இந்த அறிக்கையில், கசோக்கி படுகொலைக்கு முடிக்குரிய இளவரசர் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வொசிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்த கசோக்கி சவூதி முடிக்குரிய இளவரசரை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த அறிக்கையை தாம் வாசித்ததாகவும் அது பற்றி சவூதி மன்னர் சல்மானுடன் தொலைபேசியில் பேச எதிர்பார்த்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 85 வயதான மன்னர் சல்மான் முடிக்குரிய இளவரசரின் தந்தை ஆவார்.

ஸ்தான்பூல் துணைத் தூதரகத்தில் வைத்து கடந்த 2018 ஒக்ேடாபர் 2 ஆம் திகதி கசோக்கி கொல்லப்பட்டார். முடிக்குரிய இளவரசருடன் தொடர்புபட்ட குழு ஒன்றே இந்த படுகொலையில் ஈடுபட்டதோடு அவரது உடல் அகற்றப்பட்டது. அந்த உடல் எச்சங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தக் கொலையை தாமதித்து ஒப்புக் கொண்ட சவூதி நிர்வாகம், சட்டத்தை மீறிய குழு ஒன்றால் இது இடம்பெற்றிருப்பதாக கூறியது. எனினும் முடிக்குரிய இளவரசருடனான தொடர்பை அது மறுத்தது.

இந்தக் கொலை தொடர்பில் ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கசோக்கி குடும்பத்தினர் மன்னிப்பு அளித்ததால் அந்தத் தண்டனை 20 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

Fri, 02/26/2021 - 18:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை