சிரியாவில் ஈரானிய போராளிகள் இலக்கு மீது அமெரிக்கா தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு போராட்டக் குழுவை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் வான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.

“கணிசமான எண்ணிக்கையைக் கொண்ட ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்களை பயன்படுத்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி ஒன்றில் இருக்கும் பல தளங்கள் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மீது ஈராக்கில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்பதல் அளித்துள்ளார்.

இந்த மாத ஆரம்பத்தில் ஈராக்கில் அமெரிக்க இலக்குகள் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் சிவில் ஒப்பந்ததாரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை பயன்படுத்தும் தளம் ஒன்று உட்பட இர்பிலில் இடம்பெற்ற இந்த ரொக்கெட் குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவர் மற்றும் மேலும் ஐந்து ஒப்பந்ததாரர்கள் காயமடைந்தனர்.

பக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீது ஈராக்கில் ரொக்கெட் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கதைப் ஹிஸ்புல்லா மற்றும் கதைப் செய்யித் அல் சுஹதா ஆகிய இரு ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்களை இலக்கு வைத்து கிழக்கு சிரியாவில் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக பெண்டகன் கூறியது.

Sat, 02/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை