கூட்டு ஒப்பந்தம் இல்லாமல் தொழிலாளர் சம்பளம் வழங்கும் முயற்சியில் கம்பனிகள் ஈடுபட முடியாது

ம.ம.மு. மறுசீரமைப்பு, பதவியேற்பு விழாவில் இராதாகிருஷ்ணன்

கூட்டு ஒப்பந்தம் இல்லாமல் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் முயற்சியில் கம்பனிகள் ஈடுப்பட முடியாது. கூட்டு ஒப்பந்தத்திருந்து விலகி செல்லவும் முடியாது. சம்பள நிர்ணய சபை என்பது தனியே தொழிலாளர்களின் சம்பள விடயத்தை மாத்திரமே தீர்மானிக்க முடியும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் அழுத்தம் அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் கம்பனிகள் நலுவல் போக்கையே கடைபிடிப்பார்கள். அரசாங்கம் வாக்குறுதியை நடைமுறைப்படுத்த அதிக அழுத்தம் தேவை என்பதை நான் உணர்கிறேன் என்றும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும் நேற்று (26) நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியரும், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான பேராசிரியர் சங்கரன் விஜேசந்திரன் மேற்கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் பிரதி தலைவர், ஏ.லோறன்ஸ், தேசிய அமைப்பாளர் ஆர். இராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம், நிதி செயலாளர் விஷ்வநாதன் புஷ்பா உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மலையக மக்கள் முன்னணியின் 80 உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

எந்த காரணம் கொண்டும் கூட்டு ஒப்பந்தம் இல்லாமல் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் முயற்சியை கம்பனிகள் ஈடுப்பட முடியாது. கூட்டு ஒப்பந்தத்திருந்து விலகி செல்லவும் முடியாது.

சம்பள நிர்ணய சபை என்பது தனியே தொழிலாளர்களின் சம்பள விடயத்தை மாத்திரமே தீர்மானிக்க முடியும்.

தொழிலாளர்களின் உரிமை சார்ந்த விடயங்கள் கூட்டு ஒப்பந்தத்திலேயே பேச முடியம்.

எனவே தொழிலாளர்களின் உரிமைகளுக்கோ, வேறு எந்த விடயங்களுக்கோ பாதிப்பு ஏற்படாத வண்ணமே சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

நான் சம்பள விடயம் தொடர்பாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவுடன் கலந்துரையாடிய பொழுது அவர் அரசாங்கம் அறிவித்துள்ள சம்பளத்தை கம்பனிகள் வழங்க மறுத்து வருவதாகவும், ஆனாலும் அரசாங்கம் எந்த வகையிலேனும் சம்பள தொகையை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்து வருகின்றது.

இது தொடர்பாக மிக விரைவில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்க தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார்.

இதனை நான் வரவேற்றதோடு, அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என தெரிவித்திருக்கின்றேன். எந்த காரணம் கொண்டும் சம்பள விடயத்தில் விட்டு கொடுப்பு இல்லை என்றார்.

 

ஹற்றன் சுழற்சி நிருபர்

Sat, 02/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை