ஆங் சான் சூ கி உள்ளிட்டோர் கைது; மியன்மாரில் இராணுவ ஆட்சி

ஆங் சான் சூ கி உள்ளிட்டோர் கைது; மியன்மாரில் இராணுவ ஆட்சி-Myanmar Coup-Military Takes Control-Aung San Suu Kyi and Other Myanmar Figures Detained

- ஒரு வருடத்திற்கு அவசரகால நிலை பிரகடனம்
- தொலைத் தொடர்புகள் யாவும் துண்டிப்பு

மியன்மாரின் (முன்னாள் பர்மா) ஆளுங் கட்சி தலைவர் ஆங் சான் சூ கி, அந்நாட்டு ஜனாதிபதி வின் மின்ற் உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அங்கு இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளதோடு, ஒரு வருடத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு இராணுவத் தளபதி ஜெனரல் மின் ஆங் லைங் (Min Aung Hlaing) எதிர்வரும் ஒரு வருடத்திற்கு நாட்டை ஆட்சி செய்வார் என, மியன்மார் இராணுவ தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

ஆங் சான் சூ கி உள்ளிட்டோர் கைது; மியன்மாரில் இராணுவ ஆட்சி-Myanmar Coup-Military Takes Control-Aung San Suu Kyi and Other Myanmar Figures Detained

அத்துடன், அந்நாட்டின் நிர்வாக தலைநகரான யங்கூனை முழுவதுமாக இராணுவம் கைவசப்படுத்தியுள்ளதோடு, அங்கு பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, கவச வாகனங்களும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, அங்கு கையடக்கத் தொலைபேசி, இணையம் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை தோன்றியுள்ளது.

மியன்மார் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூ கி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உட்பட 90 இற்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக, அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, இன்றையதினம் (01) புதிய பாராளுமன்றம் கூட இருந்த நிலையில், அங்கு இராணுவ புரட்சி நிகழ்ந்துள்ளது.

பாராளுமன்ற அமர்விற்காக அந்நாட்டு பாராளுமன்ற அங்கத்தவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Mon, 02/01/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை