காணாமல் போன மன்னார் மீனவர் மாலைதீவில்

- மூவரில் ஏனைய இருவர் உணவின்றி உயிரிழப்பு

மன்னாரிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று கடலில் காணாமல் போயிருந்த மூன்று மீனவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனைய இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்து.

ஜனவரி மாதம் 30ஆம் திகதி மன்னார் கொண்ணையான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த செபஸ்ரியான் கொட்வின் (வயது- 31), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது- 51), பாண்டியன் (வயது 23) ஆகிய மூவரும் ஒரு படகில் கடற்றொழிலுக்குச் சென்றனர்.

இந்நிலையில் கடலில் இவர்கள் சென்ற படகின் எரிபொருள் தீர்ந்து நங்கூரம் இட்டும் அது பலனளிக்கவில்லையெனவும் தொலைபேசி மூலம் தகவல் வழங்கியிருந்தனர். இதன் பின்னர் இவர்கள் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போய் 15 தினங்கள் கடந்தும் இவர்களை கண்டுபிடிக்கப்படாத நிலையில் இவர்கள் இருவரின் சடலங்கள் மாலைத்தீவில் கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகின.

மற்றுமொருவர் சுகயீனமுற்ற நிலையில் மாலைத்தீவிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் உத்தியோகத்தர் சந்திரசேகரம்பிள்ளை பவாநிதி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ தகவலும் கிடைக்காத நிலையில், உறவினர் ஊடாக தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான கண்ணன் என்றழைக்கப்படும் அன்டன் சிவதாஸ் என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படகில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக திசையறியாது இவர்கள் மூவரும் தத்தளித்துள்ளனர்.

இந்நிலையில், எரிபொருள் நிரப்பும் ப்ளாஸ்டிக் பீப்பாயுடன் கடலில் குதித்ததாகவும், மற்றயவர் உணவின்றி உயிரிழந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் அலுவலகர் குறிப்பிட்டார்.

மன்னார் குறூப் நிருபர்

Sat, 02/20/2021 - 10:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை