ஒரு கோடியே 40 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்குவது அரசின் இலக்கு

- 28 மில்.கொவெக்ஸ் தடுப்பூசிகள் விரைவில் கொள்வனவு
- அமைச்சர் ரமேஷ் பத்திரன

நாட்டிலுள்ள மக்களில் ஒரு கோடியே 40இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகுமென அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அதற்கிணங்க சர்வதேச நாடுகளிலிருந்து 28மில்லியன் தடுப்பூசிகளை விரைவாக கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

சில வாரங்களுக்கு முன்பு எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படமாட்டாது என குறை கூறி வந்துள்ள நிலையில், தடுப்பூசி கொள்வனவு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இப்போது அந்த செயற்பாடுகளில் திருப்தி இல்லை என்றும் குறை கூறி வருகின்றனர்.

எவ்வாறாயினும் நாட்டிலுள்ள 14மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் இலக்கு. அதற்கிணங்க விரைவாக தடுப்பூசிகளை வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும்.

நாட்டில் அதிகமான மக்களுக்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொடுத்து தடுப்பூசி வழங்கலில் உலகளவில் முன்னணி நாடாக இலங்கையை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

கொரோனா தடுப்பூசி தொடர்பில் எவரும் எந்தவித சந்தேகத்தையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதேவேளை தடுப்பூசி வழங்கும் பணிகள் திட்டமிட்ட வகையில் கட்டங்கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறுகிய காலத்திற்குள் அதனை நிறைவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 02/25/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை