மியன்மாரின் அரசியல் பதற்றத்தை தணிக்க அண்டை நாடுகள் முயற்சி

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சியை அடுத்து ஏற்பட்டிருக்கும் அரசியல் பதற்றத்தை தணிக்கும் முயற்சியை அண்டை நாடுகள் தீவிரப்படுத்தி உள்ளன.

இது பற்றி பேச்சுவார்த்தை நடத்த மியன்மாரின் இராணுவம் நியமித்த வெளியுறவு அமைச்சர் வுன்னா மவுங் லிவின் தாய்லாந்து சென்று திரும்பியுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சம்மேளனம் மூலம் முன்னெடுக்கப்படும் இராஜதந்திர முயற்சிகளை அடுத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லிவின் தாய்லாந்து சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.   

எனினும் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக மியன்மாரில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதில் சக ஆசியான் உறுப்பு நாட்டின் பிரச்சினையை தீர்ப்பதில் இந்தோனேசியா முன்னின்று செயற்படுகிறது. எனினும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் நேற்று மியன்மார் பயணிக்க இருந்த நிலையில் அந்தப் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இராணுவம் நியாயமான தேர்தலை நடத்துவதாக வாக்களித்திருக்கும் நிலையில் அது தொடர்பில் கண்காணிக்க ஆசியான் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை அனுப்ப இந்தோனேசியா பரிந்துரைத்துள்ளது.

புதிய தேர்தலை நடத்துவதற்கான காலம் குறித்த விபரத்தை மியன்மார் இராணுவம் வெளியிடாத நிலையில் அங்கு ஓர் ஆண்டு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் ஜனநாயக முறையில் தெரிவான ஆங் சான் சூச்சி மற்றும் தலைவர்களை விடுவிக்கக் கோரியும் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராகவும் இந்த வாரம் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறியே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக மேற்குல நாடுகளின் அழுத்தம் அதிகரித்துள்ளது. மியன்மார் மீது தடைகளை கொண்டுவருவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

Thu, 02/25/2021 - 08:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை