பெப். 10 க்கு முன் ஆயிரம் ரூபா இல்லையேல் போராட்டம்

வடிவேல் சுரேஷ் MP எச்சரிக்கிறார்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமான ஆயிரம் ரூபாய், 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் இம்முறை போராட்டமானது வேறு வடிவில் அமையுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் வடிவேல் சுரேஷ் மேலும் கூறியுள்ளதாவது, “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படும் என நாட்டில் ஜனாதிபதி அறிவிப்பு விடுத்தார். ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர், ஆயிரம் ரூபாய் குறித்த யோசனையை முன்மொழிந்தார்.

வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும். எனவே, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மட்டும் எதற்கு கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

அரசாங்கம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். கம்பனிகளுக்கு தேயிலை சபை மற்றும் திறைசேரி ஊடாக நிவாரணங்களை வழங்கலாம். அடிப்படை சம்பளத்தை 25 ரூபாயினால் உயர்த்துவதே கம்பனிகளின் கோரிக்கை.

இதனை ஏற்கமுடியாது. ஆயிரம் ரூபாய் அவசியம். சம்பள நிர்ணயசபை 6 ஆம் திகதி கூடவுள்ளது.

அதன்மூலம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். ஏனைய தொழிற்சங்கங்களும் வழங்கும் என நம்புகின்றோம்.

அந்தவகையில் பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள் சம்பள உயர்வு கிடைக்கவேண்டும்.

இல்லையேல் இம்முறை போராட்டம் வேறு மாதிரியாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mon, 02/01/2021 - 07:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை