துமிந்த சில்வா விடுதலை; கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்

- பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க

துமிந்த சில்வாவை விடுதலை செய்யும்படி மக்களும் அரசியல்வாதிகளும் ஜனாதிபதியிடம் கோரி வருகின்ற நிலையில் அந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக தெரிவித்த அவர், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வைரஸ் தொற்று நோயாளிகள் குணமடைவது அதிகமாகி உள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை அரசாங்கம் சிறப்பான வகையில் கட்டுப்படுத்தி நோயாளிகளில் 90 வீதமானவர்களை குணப்படுத்துவதுடன் மரணங்கள் மிகக் குறைவாகவே இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி மக்கள் செயற்படவேண்டும் என்றும் இன, மத ரீதியிலான சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளாமல் செயற்படுவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அரசியல்வாதிகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிக்காமல் வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை முழுமையாக மீட்டெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் மிகவும் மோசமாக வைரஸ் தொற்று பரவி வருகின்றது. வெளிநாடுகளில் அதற்கான மருந்துகள் ஆராயப்பட்டு வரும் நிலையில் உள்நாட்டிலும் மருத்துவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தடுப்பூசியை பெறுவதிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. நல்லாட்சி அரசாங்கத்திடமிருந்து நாட்டை பொறுப்பேற்று நாடு 04 சதவீத பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பாதுகாப்பற்றதாக இருந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதாள உலக செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டில் அனைவருக்கும் காணி உரிமைகளை வழங்கும் வேலைத் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய துறையான சுற்றுலாத்துறை கட்டியெழுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 01/06/2021 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை