தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலமே கடுமையான விதிகளை தளர்த்த முடியும்
சுற்றுலாத்துறையில் ஈடுபடுவோருக்கும் கொவிட்19 தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான விதிகளை தளர்த்த முடியுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியாவால் இலவசமாக வழங்கப்படும் கொவிட் - 19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை எமது நாட்டின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கே வழங்க முடியும். ஏனையவர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி மாவட்ட வாழ்வாதார மேம்பாட்டு குழு கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொவிட்19 தடுப்பூசியை எவ்வாறு வழங்குவதென ஒரு பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்டமாக சுகாதாரத் துறையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. பின்னர் முப்படைகளுக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்படும்.
கொவிட்19 தடுப்பூசி தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்களை உருவாக்க முயன்றதுடன் தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லையென்றும் கூறினர். ஆனால் உலகில் கொவிட்19 தொற்றுக்குப் பொருத்தமான தடுப்பூசியை எமது நாட்டிற்கு கொண்டுவந்துள்ளோம் .
இந்த தடுப்பூசிகளை சுற்றுலாத்துறையில் ஈடுபடுவோருக்கும் வழங்குமாறு கோரியுள்ளோம். அப்படியானால், நாட்டை மீண்டும் திறக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான விதிகளை தளர்த்த முடியும். சுகாதார புள்ளிவிவரங்களின் பிரகாரம் இந்த தடுப்பூசியை இலங்கையின் மக்கள் தொகையில் 50% முதல் 60% வரையான மக்களுக்கு வேண்டியுள்ளது.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
from tkn
Post a Comment