பாராளுமன்றத்தை மூடுவதென எந்த தீர்மானமும் கிடையாது

- சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலையிலும் தொடர்ந்தும் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ள அவர், பாராளுமன்றத்தை மூடுவதற்கு எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். 

நாளை 19ஆம் திகதி தொடக்கம் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் சபை அமர்வுகள் தொடர்பில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கலாம் என சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

அந்த நிலையில் வைரஸ் தொற்று சூழ்நிலை முற்றாக இல்லாதொழியும் வரை நாம் எமது கடமைகளை செய்யாமல் இருக்க முடியாது. 

தற்போதைய சூழ்நிலையில் நாம் பிறருக்கு உதவும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எமது செயற்பாடுகளை நாம் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் மக்களுக்கான எமது கடமைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். 

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்வது; 

உங்கள் பிரதேசங்களில் நடக்கும் திருமண வைபவங்கள் மரண வீடுகளுக்குச் சென்று உண்டு, களித்திருப்பதை விடுத்து இத்தகைய சூழ்நிலையில் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வாருங்கள் என்பதே என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

Mon, 01/18/2021 - 13:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை