சடலங்களை எரித்துவரும் செயல்; அரபு நாடுகளின் எதிர்ப்பை அரசு சம்பாதிக்க நேரிடலாம்

- ரிஷாத் பதியுதீன் MP தெரிவிக்கிறார்

கொவிட்டில் மரணிக்கும் சடலங்களை எரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தினால் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் அரபு நாடுகளின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடலாம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி தெரிவித்தார் .

நாட்டின் தற்போதைய கொவிட்19 தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொரோனாவை விட பயங்கரமாக நாட்டில் இனவாதம் தலைதூக்கி இருக்கின்றது. கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் உரிமையையே நாங்கள் கேட்கின்றோம்.

அதிக நாடுகளில் அடக்கம் செய்யப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பும் அதற்கான அனுமதியை வழங்கி இருக்கின்றது.

இலங்கையில் கொவிட்டில் மரணித்தவர்களில் 150க்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். அதில் கொவிட் தொற்று இல்லாத பலரையும் எரித்திருக்கின்றனர்.முஸ்லிம் சமூகமும் மிகவும் மனவேதனைக்கு ஆளாகி இருக்கின்றது.

இதனால் எமது நாட்டுக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்கிவரும் அரபு நாடுகளின் எதிர்ப்பை அரசாங்கம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றது. புதைக்க அனுமதிக்குமாறு 157 முஸ்லிம் நாடுகள் அரசாங்கத்திடம் கோரி இருக்கின்றன.

நிபுணர்குழு உத்தியோகபூர்வமற்ற குழு அல்ல என தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த குழுவை சுகாதார அமைச்சின் செயலாளரே நியமித்திருக்கின்றார்.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டே அடக்குவதற்கு அனுமதிக்குமாறு கேட்கின்றோம்.

ஷம்ஸ் பாஹிம், நிஷாந்தன் சுப்ரமணியம்
 

Sun, 01/10/2021 - 12:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை