மாணவர்கள், ஆசிரியர்கள் மாகாண, மாவட்டங்களை கடந்து பயணிக்க வேண்டியதில்லை

- அருகிலுள்ள பாடசாலைகளை பயன்படுத்தலாம்

மேல் மாகாணத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் வரவு சாதகமான நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை மாணவர்கள் மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ள கல்வி அமைச்சு அருகிலுள்ள பாடசாலையில் தற்காலிகமாக கல்வி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மாணவர்களை அறிவுறுத்தியுள்ளது.

அதைப்போன்று ஆசிரியர்களும் அந்த நடைமுறையை கடைப்பிடிக்க முடியும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அது தொடர்பில் அறிவுறுத்தியுள்ள கல்வியமைச்சு தாம் பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் இருக்குமேயானால் தற்போது தாம் வசிக்கின்ற பகுதியிலுள்ள பாடசாலைக்குச் சென்று கல்வி நடவடிக்கையை தொடருமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு அருகிலுள்ள பாடசாலைகளில் சென்று கல்வி கற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்

அதேவேளை ஆசிரியர்களும் மாவட்டம் அல்லது மாகாணங்களை கடந்து பயணிக்க வேண்டி இருப்பின் தமக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்பதற்கு தேவையான வசதிகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள சாதாரண தர மாணவர்கள் தொடர முடியாமல் போயிருந்த பாடங்களை மீண்டும் பின்பற்றுவதற்காக விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன அதற்கு மாணவர்களினதும் பெற்றோர்களின தும் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 01/27/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை