எத்துணை சவால்களை எதிர்கொண்டாலும் இ.தொ.கா தம் பணியைத் தொடரும்

ஜீவன் தொண்டமான் பொங்கல் வாழ்த்து

எத்துணை சவால்களை எதிர்கொண்டாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடைவிடாது தம்பணியைத் தொடருமென இ.தொ.கா பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் உதயமாகும் தைப்பொங்கல் திருநாள் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரவேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் மாற்றத்திற்காகவும், ஏற்றத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்திருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடைவிடாது தம்பணியைத் தொடரும் என்பதையும் இத்தைப்பொங்கல் பெருநாளில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

தைப்பொங்கல் பெருநாள் தமிழர்கள் பரந்துபட்டு வாழும் இடங்கள் தோறும் கொண்டாடப்படுகிறது. இதற்கமைய, மலையகமெங்கும் இத்தைப்பொங்கல் மங்களகரமாக திகழ வேண்டும். மலையகத்திலும் இந்நாட்டின் இதர பகுதிகளிலும் வசித்துவரும் இந்திய வம்சாவளி மக்கள் தென்னகப் பண்பாடு, கலாசார விழுமியங்கள் ஆகியவற்றுக்கமைய இந்தப் பொங்கல் பெருநாளை கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

ஒட்டு மொத்தமாக எமது கட்டுக்கோப்பை பலப்படுத்தி இதன் வாயிலாக எமக்குரிய உரிமைகள், இதர வரப்பிரசாதங்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு இந்நன்நாளில் நாம் திடசங்கற்பம் எடுத்துக் கொள்வோம்.

சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இப்பொங்கல் தினமானது மலையகமெங்கும் மகிழ்ச்சி பரவட்டும். இத்தருணத்தில் அனைத்து மக்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Thu, 01/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை