இலங்கை இராணுவம் மனித உயிர்களை காத்த படையணி

போர்க் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சோம்

இலங்கை இராணுவம் மனித உயிர்களை பாதுகாக்க போரிட்ட இராணுவம் என்பதால் மனிதவுரிமைச் செயற்பாடுகள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சப்போவதில்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார்.  அத்துடன், அடிப்படைவாதிகளோ, தீவிரவாதிகளோ மீண்டும் ஒருபோதும் இந்த நாட்டில் தலைத்தூக்க முடியாது. அதற்கு இடமளிக்கப் போவதில் லையெனவும் கூறினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

போதைப்பொருள் கடத்தல் நாட்டில் குறைந்துள்ளது. என்றாலும் சில சில இடங்களில் அவை பரிமாற்றப்படுகின்றன. போதைப்பொருளை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம். புத்தாண்டில் இதற்கும் மேலதிகமான நடவடிக்கைகளை நாம் எடுக்கவுள்ளோம்.

அடிப்படைவாதிகளும், தீவிரவாதிகளும், பிரிவினைவாதிகளும் மீண்டும் இந்த நாட்டில் தலைத்தூக்க முடியாது. அதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. இளைஞர்கள் ஆயுதங்களை மீண்டும் தூக்குவார்களென அண்மையக்காலமாக கருத்துகள் வெளியிட்டு வருகின்றன. அவ்வாறானதொரு நிலை ஏற்பட நாம் இடமளிக்க மாட்டோம்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று ஒருவர் இருந்தார். அவர் ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டு நாட்டை துண்டாட முற்பட்டார். என்றாலும் அவரின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் ஒருதுளி பாதிப்பேணும் ஏற்பட இடமளிக்க மாட்டோம்.

மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் 2009ஆம் ஆண்டுமுதல் எமது இராணுவத்தின்மீது சுமத்தப்பட்டன. நாம் உயிர்களை கொன்றொழித்த இராணுவோ அல்லது போர்க்குற்றங்களை செய்த இராணுவுமோ அல்ல. மனித உயிர்களை காப்பாற்றிய இராணுவம் என்பதால் மனிவுரிமைகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட போவதில்லை என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 01/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை