வழக்குத் தாக்கல் செய்யாது எவரையும் நீண்டகாலம் தடுத்து வைத்திருக்க முடியாது

அரசியல் கைதிகள் என எவரும் சிறைகளில் இல்லை என்கிறார் நீதியமைச்சர்

தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் அரசியல் கைதிகளாக எவரும் சிறையில் அடைத்து வைக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் அல்லது வேறு அர்த்தம் வழங்கப்படுகின்ற கைதிகள் தொடர்பில் அரசாங்கம் தான் தீர்மானத்தை எடுக்க வேண்டும். நீதி அமைச்சால் அவர்களுக்கு தீர்வை வழங்க முடியாது. என்றாலும், வழக்குத் தாக்கல் செய்யாது எந்தவொரு கைதியையும் நீண்டகாலம் தடுத்துவைத்திருக்க முடியாதென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 10 மணிக்குக் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பணத்தை தொடர்ந்து வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனால், ஜெனிவா கூட்டத்தொடர் மார்ச் மாதம் வரும் சூழலில் அரசியல் கைதிகள் விவகாரம் பேசுபொருளாகும். அதன் காரணமாக நாட்டின் நன்மை கருதி நீதியான சமூகமாக அரசியல் கைதிகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

நீதி அமைச்சர் தமது பதிலில், தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப் பட்டுள்ளவர்களில் எவரும் அரசியல் கைதிகள் இல்லை. 2020ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புற்று கைது செய்யப்பட்டுள்ள மரண தண்டனை கைதி ஒருவரும் மரணம் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு கைதிகளும், சாதாரண சிறைக் கைதிகள் இருவரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள 07 கைதிகளும், சாதாரண தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள மேலும் 02 கைதிகளுமே உள்ளனர்.

அரசியல் கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அரசாங்கம் தான் தீர்மானம் எடுக்க வேண்டும். நீண்ட காலமாக வழக்குத் தாக்கல் செய்யாது எந்தவொரு சட்டத்தின் கீழும் பிரஜைகளை தடுத்து வைத்திருக்க முடியாது. பிணை வழங்காதும் தடுத்து வைத்திருக்க முடியாது. விரைவாக வழக்குகள் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும். அல்லது குற்றவாளிகளென அறிக்கப்பட வேண்டும். நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நடைபெறாது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தனிமைப்பட்ட ரீதியில் ஒரு சட்டத்தரணியாக நான் அதற்கு இணக்கம் வெளியிட மாட்டேன்.

அதனால் நீதிமன்றச் செயற்பாடுகளை விரைவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். தண்டனைச் சட்டக்கோகையின் கீழ்தான் நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அதற்கு அப்பால் உள்ளவர்கள் தொடர்பில் அரசாங்கம் தான் தீர்மானிக்க முடியும்.

எமது அமைச்சின் மூலம் அதற்கு எந்தவொரு தீர்வையும் வழங்க முடியாது என்றார்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Fri, 01/08/2021 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை