கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுகளுக்கு தடைபோடும் சீனா

கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா செல்லும் வல்லுநர் குழுவுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படாததற்கு உலக சுகாதார அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மெல்ல உலகெங்கும் பரவ தொடங்கியது. தற்போது இந்த தொற்றுக்குத் தடுப்பூசி கண்டறியப்பட்டு, அதை வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் அதன் தீவிர தன்மை குறித்துப் புரிந்து கொள்ளவும் கொரோனா வைரசின் தோற்றம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று சில மாதங்களுக்கு உலக சுகாதார அமைப்பு கூறியது. இதற்காக உலக சுகாதார அமைப்பின் விலங்கு நோய்கள் பிரிவின் உயர் நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட ஆராய்ச்சிக்காக பீட்டர் பென் எம்பரேக் கடந்த ஜூலை மாதம் சீனாவுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், கொரோனா வைரசின் தோற்றம் குறித்து அடுத்தகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் 10 பேர் கொண்ட வல்லுநர் குழு இம்மாத தொடக்கத்தில் சீனா செல்வதாக இருந்தது. இருப்பினும், இக்குழு சீனாவுக்குள் நுழைய அந்நாடு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில்,

'எங்கள் நிபுணர் குழுவுக்குத் தேவையான அனுமதியைச் சீனா இன்னும் வழங்கவில்லை. இது குறித்து நான் சீனாவில் இருக்கும் சில மூத்த அதிகாரிகளுடன் பேசினேன். அவர்களிடம், இந்த ஆய்வுப் பணிகள் உலக சுகாதார அமைப்பிற்கு மிகவும் முக்கியமானது என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்தினேன்' என்றார்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரிலேயே இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸை சீனா திட்டமிட்டு உருவாக்கியதாகவும் செய்திகள் உலா வர தொடங்கின. இதை முற்றிலும் மறுத்த சீனா, வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா எப்போதும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை அளிக்கும் என்று தெரிவித்திருந்தது.

Fri, 01/08/2021 - 10:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை