ட்ரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானம் அமெ. பாராளுமன்றில் நிறைவேற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானம் அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் இந்தத் தீர்மானத்திற்கு இரண்டாவது முறை முகம்கொடுக்கும் முதல் ஜனாதிபதியாக டிரம்ப் பதிவாகியுள்ளார்.

அமெரிக்க பாராளுமன்றம் அமைந்திருக்கும் கெப்பிட்டல் கட்டடத்தில் கடந்த வாரம் டிரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து கலகத்தில் ஈடுபட்டது தொடர்பில் டிரம்ப் மீது கலகத்தை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தமது பொய்யான தேர்தல் மோசடி குற்றச்சாட்டு மூலம் வன்முறையை ஊக்குவித்ததாக பிரதிநிதிகள் சபை டிரம்ப் மீது குற்றம்சாட்டியுள்ளது.

இதன்படி டிரம்ப் அமெரிக்க பாராளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் விசாரணைக்கு முகம்கொடுக்கவுள்ளார். எனினும் அவர் வரும் ஜகவரி 20 ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறவிருக்கும் நிலையில் அதற்கு முன்னர் இந்த விசாரணைகள் நடைபெறாது.

இந்த பதவி நீக்கத் தீர்மானத்திற்கு செனட்டில் போதுமான ஆதரவு கிடைத்தால் டிரம்பினால் மீண்டும் அரச துறை பதவிகளை வகிக்க முடியாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதிநிதிகள் சபையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 232 வாக்குகளும் எதிராக 197 வாக்குகளும் பதிவாகின. டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்புக்குப் பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்ட டிரம்ப், அமைதியை காக்கும்படி தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கும் வரும் புதன்கிழமை வொசிங்டன் டி.சி மற்றும் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் இடம்பெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 01/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை