ஜெனீவாவில் அரசு மீதான குற்றச்சாட்டை முறியடிப்போம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என்பதனை நிரூபிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. நலின் பெர்ணான்டோவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஜெனிவாவில் எமக்கு எதிராக 08 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை அனைத்தும் போலியானவை. இது தொடர்பில் ஆராய்ந்துகூட பார்க்காமல் ஏற்றுக்கொண்டு இணை அனுசரணை வழங்குவதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.

தமது நாட்டு படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதனை எந்தவொரு நாட்டினதும் வெளிவிவகார அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால் நல்லாட்சியின்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

எது எப்படியிருந்தாலும் மேற்படி குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்பதனை இம்முறை மார்ச் மாதக் கூட்டத்தொடரில் நிரூபிப்போம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 01/07/2021 - 07:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை