செயல்திறன் மிக்க மற்றொரு கொவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிப்பு

பிரிட்டனில் இடம்பெற்ற பரந்த அளவிலான சோதனையில் கொரோனா தொற்றுக்கு எதிராக புதிய தடுப்பு மருந்து ஒன்று 89.3 வீதம் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.

நோவாவெக்ஸ் என்ற இந்த தடுப்பூசி பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாத் தொற்றின் புதிய திரிபுக்கு எதிராகவும் வெற்றிகரமாக செயற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 18 முதல் 84 வயது வரையிலான பல்வேறு வயதுடையவர்கள் அடங்கிய 15,000 பேர் கலந்து கொண்ட மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா வைரஸுக்கு எதிராக நோவாவெக்ஸ் தடுப்பூசி 89.3 வீதம் செயல்திறனைக் காட்டியுள்ளது. இதில் 27 வீதத்தினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என நோவாவெக்ஸ் கூறியுள்ளது.

கொரோனா வைரஸின் தென்னாபிரிக்கத் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பங்கெடுத்த பரிசோதனையில், எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்படாதவர்களிடம் 60 வீதம் செயல்திறனைக் காட்டியுள்ளது.

“பிரிட்டனில் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகள் நாங்கள் நம்பியது போன்று சிறப்பானதாக இருந்தது. அதே நேரத்தில் தென்னாபிரிக்காவில் நடத்தபட்ட சோதனையில் மருந்தின் செயல்திறன் மக்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது" என்று நோவாவெக்ஸின் முதன்மைச் அதிகாரியான ஸ்டான் எர்க் தெரிவித்தார். பிரிட்டன் இந்த புதிய நோவாவெக்ஸ் தடுப்பு மருந்திலும் 60 மில்லியன் டோஸ்களை முன்பதிவு செய்துள்ளது. இந்த மருந்து இங்கிலாந்திலிருக்கும் ஸ்டாக்டன் நகரில் தயாரிக்கப்படும்.

ஒருவேளை இந்த மருந்துக்கு பிரிட்டனின் மருந்து கட்டுப்பாட்டு முகமை அனுமதி வழங்கினால், நோவாவெக்ஸ் உற்பத்தி செய்யப்பட்டு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக பிரிட்டன் அரசு கூறுகிறது. இந்த நோவாவெக்ஸ் தடுப்பு மருந்து குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலையில் வைக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 01/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை