தாய்வான் மீது சீனா 'போர்' எச்சரிக்கை

தாய்வான் சுதந்திரம் பெற முயற்சிப்பது என்பது 'போர் என்று அர்த்தம் கொள்ளப்படும்' என சீனா கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த தீவுக்கு அருகில் சீன போர் விமானங்கள் பறப்பது மற்றும் இராணுவ செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தாய்வான் மீதான தமது பொறுப்புகள் பற்றி உறுதி அளித்திருக்கும் சூழலிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் இந்த அறிவிப்பை, 'துரதிருஷ்டவசமானது' என்று பதிலளித்திருக்கும் அமெரிக்கா, 'தாய்வானுடனான பதற்றத்தை மோதலுக்கு இட்டுச்செல்லக் கூடாது' என்றும் வலியுறுத்தியுள்ளது.

தாய்வானை தமது பிரிந்து சென்ற மாகாணமாக சீனா கருதும் நிலையில், தாய்வான் தம்மை ஒரு இறைமை கொண்ட நாடாக கூறுகிறது.

“தாய்வான் சுதந்திர சக்திகளுக்கு நாம் இதனை கண்டிப்பாக கூறுகிறோம்: நெருப்புடன் விளையாடுபவர்கள் அதில் கருகுவார்கள் என்பதோடு தாய்வான் சுதந்திரம் என்பது போர் என்று அர்த்தம் கொள்ளப்படும்” என்று சீன பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் வூ கியான் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். சீனாவின் அண்மைய இராணுவ செயற்பாடுகளையும் அவர் பாதுகாத்து பேசினார். “தாய்வான் நீரிணையில் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறைமையை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டி உள்ளது” என்ற தெரிவித்தார்.

1949இல் சீன சிவில் யுத்தம் முடிவுற்றது தொடக்கம் சீனா மற்றும் தாய்வானில் வெவ்வேறு அரசுகள் உள்ளன. தாய்வானின் சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு சீனா நீண்ட காலமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தாய்வானை உலகின் ஒருசில நாடுகள் மாத்திரமே அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீவை தமது நாட்டுடன் மீண்டும் இணைப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்தும் வாய்ப்பை சீனா மறுக்காத நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான பதற்றம் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளது.

Sat, 01/30/2021 - 07:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை