ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பம்

அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பு

நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தின் கீழ் ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் நேற்றுக் காலை கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்படி செயற்றிட்டத்தின் கீழ் முதலாவது தேசிய பாடசாலையாக 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கோட்டேயில் உள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர வித்தியாலயத்தில் நேற்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெற்றது. இலவசக் கல்வியின் பிதா என அழைக்கப்படும் கலாநிதி சி. டபிள்யூ. டபிள்யூ கன்னங்கரா கல்வி பயின்ற மேற்படி பாடசாலை பல்வேறு தேவைகள் நிறைந்த பாடசாலையாக காட்சியளிக்கின்றது.

கொழும்பு மாவட்டத்தில் 200 வருடம் பழமை வாய்ந்த மேற்படி வித்தியாலயம் 14 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது.

மேற்படி பாடசாலையில் மாணவர்கள் அனைத்து வசதிகளையும் பெற்று சிறப்பாக கல்வி கற்கும் வகையில் கணினி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்,மொழிக் கல்வி, உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டு முழுமையாக இந்தப் பாடசாலை அபிவிருத்தி அடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய பாடசாலைகளிலும் இத்தகைய அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சு ஈட்ட வுள்ள இலக்குகள் தொடர்பில் இங்கு கருத்து தெரிவித்த கல்வியமைச்சர், பாடசாலைகளுக்கிடையிலான முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும்.

ஜீவனோபாய வழி முறைகள் மற்றும் மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் கல்வியில் நிலவும் இடைவெளியை நிவர்த்தி செய்தல், தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு பொருத்தமான கல்வி முறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார் அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் கல்வி அமைச்சினால் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் ஆயிரம் தேசிய பாடசாலைகள் திட்டம் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

ஏற்கனவே முதலாவது கட்டமாக 123 பாடசாலைகளும் இரண்டாம் கட்டமாக 673 பாடசாலைகளை அபிவிருத்தி செய்து தரமுயர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Thu, 12/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை