முழு விசாரணைக் குழு அறிக்கை நீதியமைச்சரிடம்

நேற்று தலைவி குசலாவினால் கையளிப்பு

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முழுமையான அறிக்கை நேற்று நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

மஹர சிறைச்சாலைக்குள் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முழுமையான அறிக்கை குழுவினரால் நீதி அமைச்சரிடம் நேற்று கையளிக்கப்பட்டது

குழுவின் தலைவர் முன்னாள் மேல்நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜினி வீரவர்தன அறிக்கையை அமைச்சரிடம் கையளித்தார்.

குழுவின் அங்கத்தவர்களான ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.த.சில்வா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ரோஹன ஹபுகஸ்வத்த, முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் காமினி ஜயசிங்க, ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் டி. ஆர். எல். ரணவீர ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நீதி அமைச்சர் கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி இந்தக் குழுவை நியமித்திருந்தார்.

இந்த குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த டிசம்பர் 07ஆம் திகதி நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இவ்வேளை, ஒரு மாத காலத்துள் முழுமையான அறிக்கை கையளிக்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இதன்படி நேற்று 30ஆம் திகதி இந்த அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி,

கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அசம்பாவிதம் சம்பவம் தொடர்பில் விஞ்ஞானபூர்வமாகவும் மனிதாபிமான முறையிலும் அணுகினோம்.

இதுபோன்ற சம்பவங்கள் மேலும் இடம்பெறக் கூடாது என்பதையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறானதொரு சம்பவம் ஏன் நடைபெற்றது? என்பது தொடர்பில் ஆராய்வதற்கு எமக்கு தேவையேற்பட்டது. இதற்கான காரணம் என்ன? இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெற்றால் அதனை தடுப்பது எப்படி? என்பது தொடர்பில் எமக்கு தேவை இருந்தது. எனவே பல்துறை சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமித்தோம்.

அவர்கள் ஒரு வாரத்துக்குள் இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த இடைக்கால அறிக்கையை நாங்கள் பாராளுமன்றத்திலும் சமர்ப்பித்தோம். அந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய செயற்பட்டோம். அந்த அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்து எதிர்காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் நடைபெறாது நடவடிக்கை எடுப்போம். இந்த குழுவின் நடவடிக்கைளுக்கு நாங்கள் ஒருபோதும் தலையிட்டதில்லை. குழுவினர் சுயாதீனமாகவே செயற்பட்டிருக்கிறார்களென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கே. அசோக்குமார்

Thu, 12/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை