தென்னாபிரிக்காவில் மற்றொரு புதிய கொரோனா வைரஸ் திரிபு

பிரிட்டனில் மற்றொரு புதுவகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

அது தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதுவகைக் கொரோனா வைரசுடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது. தென்னாபிரிக்காவிலிருந்து பிரிட்டன் திரும்பிய கொவிட்–19 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவரிடம் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும், தென்னாபிரிக்காவுக்குக் கடந்த 2 வாரங்களில் பயணம் மேற்கொண்டவர்களும் தனிமைப்படுத்தப்படுவர் என்று அமைச்சர் ஹான்காக் கூறினார்.

தென்னாபிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் அது பொருந்தும். புதிய வகை நோய்க்கிருமி மேலும் எளிதில் தொற்றக்கூடியது என்றும் பிரிட்டனில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு கொரோனா வைரஸ் திரிபை விட அது மேலும் மாற்றமடைந்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

தென்னாபிரிக்காவில் புதுவகைக் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

அங்கு வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்ததற்குப் புதுவகை வைரஸே காரணம் என்றும் கூறப்பட்டது. பிரிட்டனில் அந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தென்னாபிரிக்கா மீது உடனடியாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமைச்சர் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன், அங்கு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட அதிக அபாயம் கொண்ட மற்றொரு புதிய ரகக் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முயன்றுவருகிறது.

ஏற்கனவே பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் திரிபுடன், இந்த புதிய தென்னாபிரிக்கத் திரிபு சில ஒற்றுமைகளை வெளிப்படுத்துகிறது. இரண்டு திரிபுகளிலுமே N501Y என்கிற மரபணு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இது தான் இந்த வைரஸின் மிக முக்கிய பகுதி. இந்த பகுதியைக் கொண்டு தான், மனித உடலில் இருக்கும் செல்களைத் தாக்குகிறது கொரோனா வைரஸ்.

“இளைஞர்கள் மற்றும் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் கூட தற்போது நோய்வாய்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என தென்னாபிரிக்காவின் சுகாதார அமைச்சர் ஸ்வெலி ஹிஸ் தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

எச்.ஐ.வி தொற்று வந்த ஆரம்ப காலகட்டத்தில், தென்னாபிரிக்கா சந்தித்த சவால்களை, தற்போது மீண்டும் சந்திக்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் இந்த புதிய திரிபு அதிவேகமாக பரவி வருவதாகவும், கொரோனா நோயாளிகளில் பலரும் இந்த புதிய திரிபினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தென்னாபிரிக்காவில் இதுவரை 9.5 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதோடு 25,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

Fri, 12/25/2020 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை