இந்தோனேசியாவுக்கு சீனாவின் கொரோனா தடுப்பூசிகள் வருகை

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு போராடி வரும் உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியாவுக்கு சீனாவின் சினோவக் நிறுவனத்தின் 1.2 மில்லியன் அளவு தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பீஜிங்கில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜகார்த்தாவை நோக்கி வந்த விமானத்திலேயே இந்த தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. மேலும் 1.8 மில்லியன் அளவு மருந்துகள் அடுத்த மாதம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு நாட்டுக்கும் கொரோனா தடுப்பு மருந்தை பாரிய அளவில் விநியோகிப்பதற்கு சீன நிர்வாகம் இன்னும் அனுமதி அளிக்காதபோதும், அவசர பயன்பாட்டுக்காக முன்னுரிமை அளிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள், மருந்து மற்றும் உணவு நிறுவனத்தால் சோதிக்கப்பட்டு மருத்துவர்கள் மற்றும் அதிக அச்சுறுத்தல் உடையவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக இந்தோனேசிய கொவிட்–19 நடவடிக்கைக் குழுத் தலைவர் ஆர்லெக்கா ஹார்டாடோ நேற்று தெரிவித்தார்.

இந்த மருந்து ஹலால் அனுமதியை பெறுவதற்கு இந்தோனேசிய உலமா சபையில் சோதனைக்கும் உட்படவுள்ளது.

மூன்று மில்லியன் அளவு சினோவக் தடுப்பு மருந்தை பெறுவதற்காக இந்தோனேசிய அரசு 45 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளது.

மற்றொரு சீன மருந்தக நிறுவனமான கன்சினோவின் 100,000 அளவு கொரோனா தடுப்பு மருந்தைப் பெறவும் இந்தோனேசியா எதிர்பார்த்துள்ளது.

கொவிட்–19 தொற்றினால் ஆசியாவில் மோசமாக பதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தோனேசியாவில் 575,000 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 17,000 க்கும் அதிகமான உயரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

 

Tue, 12/08/2020 - 10:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை