சிவிலுடையில் பொலிஸாரை கடமையிலீடுபடுத்தத் திட்டம்

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் வீதியில் இருப்பார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். தற்போது வீதிகளில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, அனுராதபுரம் – பாதெனிய வீதியில் பஹலபலல்ல பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குழந்தையுடன் தாய் வீதியைக் கடக்கும்போது அனுராதபுர நோக்கி வந்த கெப் ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து நேற்று முன்தினம் மாலை ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றபோது கெப் ரக வாகனத்தில் 11 பேர் பயணித்திருந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்திற்குப் பின்னர் வண்டியின் சாரதி மற்றும் இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டதாக தெரியவந்துள்ளது. ஏனைய 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் தப்பி ஓடிய நபர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்து சம்பவத்தில் 32 வயதான தாய் மற்றும் மூன்றரை வயதான குழந்தையும் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது. அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு மொரட்டுவ பகுதியில் தாய் மற்றும் இரண்டு மகள்களும் வீதியைக் கடக்கும்போது கவனக்குறைவாக வருகை தந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர் மற்றும் தாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், கவனக்குறைவாகவும் வேகமாக வாகனம் ஓட்டுவதாலும் வீதி பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதாக அஜித் ரோஹானா தெரிவித்தார். தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் 20 திகதி முதல் வீதி போக்குவரத்து பாது காப்பிற்காக விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் வீதி பாதுகாப்பு ஆகியவற்றில் சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Thu, 12/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை