வடக்கு, கிழக்கை புரட்டியெடுத்த புரவி சூறாவளி

- 13,052 குடும்பங்களைச் சேர்ந்த 43,814 பேர் பாதிப்பு
- ஒருவரை காணவில்லை; 6 பேர் நால்வர் படுகாயம்

புரவி சூறாவளி காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 13,052 குடும்பங்களைச் சேர்ந்த 43,814 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

குறிப்பாக, வடக்கு, கிழக்கு பகுதிகளில் 3,575 குடும்பங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

திருகோணமலை மாவட்டத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்தது.

கரவெட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காணாமல் போய் உள்ளதுடன் காயமடைந்த நால்வரும் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டதாகவும் அந்த நிலையம் தெரிவித்தது. அதேவேளை கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர் வெள்ளத்தில் அகப்பட்டு மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளத்தில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலீசார் தெரிவித்தனர்.

குறிப்பாக வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டதுடன் 12 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்தது.

மேற்படி சூறாவளியினால் யாழ் மாவட்டத்தில் 9,346 குடும்பங்களைச் சேர்ந்த 31,703 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மழை வெள்ளம் காரணமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்றைய தினம் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு துணுக்காய் பகுதிகளிலேயே நேற்றையதினம் மழைவீழ்ச்சி அதிகமாக பதிவாகியுள்ள நிலையில் துணுக்காய் பகுதியில் 392 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதி வீதிகளில் போக்குவரத்துக்கு பெரும் தடை ஏற்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தில் 405 குடும்பங்களைச் சேர்ந்த 1,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 282 குடும்பங்களைச் சேர்ந்த 722 பேர் 04 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் ஆனையிறவு பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

வீதிகளில் மரங்கள் சரிந்து உள்ளதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில்

தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்திலும் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று பிற்பகல் மழை வீழ்ச்சி குறைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன

அதேவேளை புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கடும் மழை பெய்துள்ளது. சில பிரதேசங்களில் கடலில் பெரும் கொந்தளிப்பு காணப்பட்டதாகவும் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்ல கூடாது என்று அங்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது.

எவ்வாறெனினும் வடக்கு வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி கடல் பிரதேசங்களில்காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்றும் மணித்தியாலத்துக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்தது.

அதேவேளை புரவி சூறாவளி காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் முழுமையாக 48 வீடுகளும் பகுதியளவில் 152 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் பகுதியளவில் 06 வீடுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு வீடு முழமையாகவும் 136 வீடுகள் பகுதியளவிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு வீடு பகுதியளவிலும், வவுனியா மாவட்டத்தில் 57 வீடுகள் பகுதியளவிலும் என மொத்தமாக வடக்கில் 49 வீடுகள் முழுமையாகவும், 2,026 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்தது. 

திருகோணமலை மாவட்டத்தில் 67 வீடுகளும் சேதமடைந்துள்ளதுடன் மொத்தமாக வடக்கு கிழக்கில் 2,000 இற்கும் அதிக வீடுகள் சேதமடைந்துள்ளதாக அந்நிலையம் தெரிவித்தது.

அதேவேளை அதற்கு மேலதிகமாக வடக்கில் 9 வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

புரவி சூறாவளி நேற்றைய தினம் குறைந்த வேகத்துடன் நாட்டுக்கு வெளியே நகர்ந்ததாகவும் அதன் பாதிப்புகள் நாட்டில் குறைந்து வருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 12/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை