O/L பரீட்சை 2021 மார்ச் மாதத்தில் நடத்த தீர்மானம்

கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிவிப்பு

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகக் கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலையடுத்து தீர்மானிக்கப்பட்ட திகதியில் சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு முடியாது என கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். சாதாரண தர பரீட்சை மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டால் 3 மாத காலப்பகுதியினுள் பரீட்சை முடிவுகள் வெளியிட பரீட்சை திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கமைய மார்ச் மாதம் பரீட்சை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதனை தொடர்ந்து பிற்போட அவசியமில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.ஜுலை மாதம் முதல் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் எதிர்பார்ப்பில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2021 மார்ச் மாதத்தில் பரீட்சை நடத்துவதற்கு பொருத்தமான 9 நாட்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு, சுகாதார அதிகாரிகள் மற்றும் ஏனைய உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவளை, கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற உயர்தர பரீட்சை முடிவுகள் 4 மாதங்களுக்குள் வெளியிடப்படுவதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.எனினும் 6 வாரங்களுக்கு முன்னர் பரீட்சைக்கான புதிய திகதியை அறிவிப்பதாகவும் கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும், திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 12/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை