அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கு அரசின் வேலைத்திட்டம் தயார் நிலையில்

அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ சபையில் அறிவிப்பு

'புறவி' சூறாவளியினால் அனர்த்தங்கள் ஏற்படும் சாத்தியமுள்ள சகல மாவட்டங்களிலும் உடனடியாக செயற்படக் கூடியவகையில் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கு தேவையான சகல வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாக நீர்ப்பாசன அமைச்சரும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்‌ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு தேவையான நிதிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். புறவி சூறாவளி தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு சார்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சூறாவளி தாக்கத்திற்கு உள்ளாகவுள்ளதாக நவம்பர் 27 ஆம் திகதி வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியது.

திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட மட்டத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்கள் ஏற்படும் சாத்தியமுள்ள பிரதேசங்களில் உடனடியாக செயற்படும் வகையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்து நிலையம்,வளிமண்டலவியல் திணைக்களம்,தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், நிவாரண பிரிவு, நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

அனர்த்தங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான தங்குமிட வசதி உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளுக்கும் என ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நிதியை வழங்க நடவடிக்கையெடுக்கப்படும். அனர்த்த பாதுகாப்பு மத்திய நிலையங்களில் கொவிட் தொற்றுப் பரவுவதை தடுக்கும் வகையில் முறையான சுகாதார பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றுவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஷம்ஸ் பாஹிம்,சுப்ரமணியம் நிசாந்தன்

 

Thu, 12/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை