அனைத்து துறைகளிலும் தன்னிறைவடைய செய்யும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்

- பிரதமர்

எமது நாடு குறித்த எதிர்பார்ப்புகளை கொண்டிருக்க வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்யும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இரத்மலானையில் அமைந்துள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் புதிய ஹோர்மோன் மாத்திரை உற்பத்தி ஆலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய நாட்டிற்கு புதிய ஒளடதம் எனும் எண்ணக்கருவிற்கமைய அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் புதிதாக உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட ஃப்ளுகோஷைலின் ஒளடத மாத்திரையை பிரதமரிடம் வழங்கி, அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

விசேடமாக 2012ஆம் ஆண்டிலேயே இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு எமக்கு அனுமதி வழங்கப்பட்டது. அன்று 4470 மில்லியன் இதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் திறன் இரட்டிப்பாகியுள்ளது.

எனினும், நாம் 70 வீதமான ஒளடதங்களை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றோம். நாம் அவ்வாறு இறக்குமதி செய்கின்றோமாயின், அந்த ஒளடதங்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதனை செய்வதற்கான ஞானம் மற்றும் அறிவு மிகுந்தவர்கள் எம்மிடம் உள்ளனர்.

அதனால், அவ்வாறான ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்தை கொண்டு சேவையை பெற்றுக் கொள்ள வேண்டும் என நம்புகின்றோம்.

இந்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்றும், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதனால் அதற்கான வேலைத்திட்டங்களை நாம் அனைத்து துறைகளிலும் செயற்படுத்த வேண்டும்.

ஒளடத உற்பத்தி வலயமொன்றை அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கவுள்ளோம். நான் அது தொடர்பில் தற்போது செயலாளரிடம் வினவினேன். அது வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மாத்திரம் எனக் கூறினார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி,

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், நிதி அமைச்சராக இந்நிறுவனத்தை பாரிய விரிவாக்கத்திற்கு உட்படுத்தினார். அதன் பலன்களை இன்று நாம் அனுபவித்து வருகின்றோம்.

அதேபோன்று எமது நாட்டிற்கு தேவையானவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆர்வம் செலுத்திவருகிறார். அதற்கு பிரதமரின் தலைமையில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன,

இவ்விடயம் தொடர்பில் ஏற்பட்ட தடைகள் பலவாகும். புதிய செயலொன்றை செய்வது எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதேபோன்று இந்த ஃப்ளுகோஷைலின் எனும் ஒளடதத்தை நாம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளோம். அரச துறையின் சுமார் 550 மில்லியன் ரூபாய்கள் மற்றும் தனியார் துறையின் சுமார் 450 மில்லியன் ரூபாய்கள் செலவில் அது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை நாம் திறந்து வைப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அதன் உண்மையான நிலை என்னவென்றால், 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் பிரதமரினால் ஆரம்பிக்கப்பட்டவற்றையே அவர்களால் நிறைவு செய்ய முடியவில்லை.

உதாரணமாக கடந்த காலத்தில் 4 அல்லது 5 ஒளடத வகைகளே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. எனினும் கடந்த சில மாதங்களில் மாதத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் ஒடளத வகைகளை நாம் உற்பத்தி செய்தோம்.

பிரதமர், அதன் மூலம் சுமார் 1.5 பில்லியன் ரூபாய்களை சேமிப்பதற்கு எமக்கு வாய்ப்பு கிடைத்தது. நாம் இந்த வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம். அதற்காக ஹொரண மில்லேவ பிரதேசத்தில் இதேபோன்ற இதைவிட வசதிகள் மிகுந்த புதிய ஒளடத உற்பத்தி ஆலையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.

Fri, 12/25/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை