பாதுகாப்பு சட்டமூலத்தை இரத்துச் செய்தார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி 740 பில்லியன் டொலர் மதிப்பிலான பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை இரத்துசெய்துள்ளார்.

அமெரிக்க பாராளுமன்றம் இந்த மாதம் அந்த சட்டமூலத்திற்கு அங்கீகாரம் அளித்திருந்தது.

ஆப்கானிஸ்தான், ஐரோப்பா ஆகியவற்றிலிருந்து அமெரிக்கத் துருப்பினரை மீட்டுக்கொள்வதற்கான கட்டுப்பாடுகள், 19ஆம் நூற்றாண்டில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட தென் மாநிலங்களின் கூட்டமைப்புத் தலைவர்கள் பெயரை இராணுவத் தளங்களிலிருந்து நீக்குதல் ஆகியவற்றுக்கு ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார்.

அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கிய பின், ஜனாதிபதி கையெழுத்திட்டால் தான் வரவு செலவுத் திட்டம் அங்கீகாரம் பெறும்.

ஜனாதிபதி தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை நிராகரிப்பதோ, இரத்துசெய்வதோ அரிய நிகழ்வுகள்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால், பாராளுமன்றம் ஜனாதிபதியின் உத்தரவை மீறி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

வரும் திங்கட்கிழமை அதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியை மீறி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி உறுப்பினர்களை வலியுறுத்தப்போவதாக மக்களவை நாயகர் நான்சி பெலோசி கூறியுள்ளார். 

Fri, 12/25/2020 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை