உலக கொரோனா தொற்று 75 மில்லியனை தாண்டியது

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 75 மில்லியனைத் தாண்டியுள்ளது என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது,

நோய்த்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசி போட ஆரம்பித்துள்ள வேளையில் அந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இம்மாதம் பைசர் – பயோஎன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்த ஆரம்பித்த முதல் மேற்கத்திய நாடாக பிரிட்டன் பதிவானது.

பின்னர் அமெரிக்காவும் அந்தத் தடுப்பூசியைப் போட ஆரம்பித்தது. தற்போது மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் அங்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் 18.65 மில்லியன் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் புதிதாகப் பதிவாகின. 30 நாளில் பதிவான மிக அதிக எண்ணிக்கை இதுவாகும். ஐரோப்பாவில் மிக அதிகமான வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து வட அமெரிக்கா, தென்னமெரிக்கா, ஆசியாவில் மிக அதிகமான வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை கடந்த திங்கட்கிழமை 300,000ஐத் தாண்டியது. அங்கு 17 மில்லியன் பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்தியாவில் நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை 10 மில்லியனைத் தாண்டியது.

அடுத்த 6 முதல் 8 மாதங்களில் 600 மில்லியன் முறை போடத் தேவையான அளவு தடுப்புமருந்தை விநியோகம் செய்ய அந்நாடு தயாராகி வருகிறது.

Mon, 12/21/2020 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை