கொவிட்–19: சுவாசிலாந்து பிரதமர் ட்லாமினி மரணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நான்கு வாரங்களின் பின் எஸ்வாட்டினி நாட்டு பிரதமர் எம்ப்ரோஸ் ட்லாமினி மரணமடைந்துள்ளார்.

52 வயதான ட்லாமினி கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தென்னாபிரிக்க மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான காரணம் கூறப்படாதபோதும், ட்லாமினி தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். முன்னர் சுவாசிலாந்து என்று அழைக்கப்பட்ட எஸ்வாட்டினியில் கடந்த 2018 ஒக்டோபர் மாதம் தொடக்கம் ட்லாமினி பிரதமர் பதவியை வகித்துவந்தார்.

தெற்கு ஆபிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட இந்த நாடு உலகில் முழுமையான மன்னராட்சி உள்ள ஒருசில நாடுகளில் ஒன்றாகும்.

ஒரு மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் 6,768 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக ட்லாமினி கடந்த நவம்பர் 16 ஆம் திகதி அறிவித்திருந்தார். தமக்கு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் தாம் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tue, 12/15/2020 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை