அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் டிரம்ப்–பைடன் இடையே கத்திமுனை போட்டி

இரு வேட்பாளர்களும் வெற்றி பற்றி முன்கூட்டியே அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் தற்போதைய ஜனாதிபதியான குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் இடையே கத்திமுனை போட்டி நீடித்தது. முடிவை மாற்றக்கூடிய முக்கிய மாநிலங்களிலும் இருவருக்கும் இடையே நெருக்கமான போட்டி இருந்து வந்தது.

வாக்குகள் எண்ணப்படும் நிலையிலேயே டிரம்ப் வெற்றி அறிவிப்பை வெளியிட்டதோடு, அடிப்படை அற்ற மோசடி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். உச்ச நீதிமன்றம் செல்வதாகவும் அவர் சூளுரைத்துள்ளார்.

முன்னதாக தாம் வெற்றியின் பாதையில் இருப்பதாக பைடன் கூறியிருந்தார்.

நேற்று மாலை வரை மில்லியன் கணக்கான வாக்குகள் எண்ணப்படவிருந்த நிலையில் வெற்றியாளரை தேர்வு செய்யும் முடிவு வெளியாவதற்கு தாமதம் ஏற்பட்டிருந்தது. இரு வேட்பாளர்களும் வெற்றி பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டபோதும் அவை நம்பகமானதாக இருக்கவில்லை.

இந்த தேர்தல் முடிவுகளை ஒட்டி அமெரிக்கா எங்கும் நேற்று ஓர் இழுபறிச் சூழல் ஏற்பட்டிருந்ததோடு இறுதி முடிவு பல நாட்களுக்கு பின்னரே தெரியவரும் நிலை உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் 100 மில்லியனுக்கு அதிகமானவர்கள் தேர்தல் தினத்திற்கு முன்னரே முன்கூட்டிய வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். இது ஒரு நூற்றாண்டில் அதிக வாக்களிப்பு வீதத்தை கொண்ட தேர்தலாகவும் பதிவானது.

வெளியான முடிவுகளின்படி

தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகளை முறியடிக்கும் வகையில் டிரம்ப் இந்தத் தேர்தலில் பல இடங்களிலும் அதிக வாக்களை வென்றிருந்தார். பைடன் தொடர்ந்து போட்டியில் இருந்த நிலையில் ஒட்டுமொத்த முடிவில் எந்த மாற்றமும் நிகழக்கூடிய வாய்ப்பு இருந்து வந்தது.

அமெரிக்கத் தேர்தல் என்பது நாடு தழுவிய வாக்கு எண்ணிக்கைக்கு பதில் மாநில அளவிலான போட்டியாகவே உள்ளது.

எனவே, ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் ஒருவர் 270 எலெக்டோரல் கொலேஜ் வாக்குகளை வெல்லவேண்டி உள்ளது. மாநில அளவில் மக்கள் தொகை அடிப்படையில் இந்த வாக்குகள் பிரிகின்றன.

நேற்று மாலை வரை வெளியான முடிவுகளின்படி பைடன் 238 எலெக்டோரல் கொலேஜ் வாக்குகளையும் டிரம்ப் 213 இடங்களையும் வென்றிருந்தனர்.

குறிப்பாக தீர்க்கமான புளோரிடாவில் டிரம்ப் வெற்றி பெற்றது அவர் தொடர்ந்து போட்டியில் நீடிப்பதில் முக்கியமானதாக அமைந்தது. குடியரசுக் கட்சியின் கோட்டையான டெக்சாஸில் பைடன் திருப்பத்தை எதிர்பார்த்தபோதும் டிரம்ப் அங்கு வெற்றியை உறுதி செய்துள்ளார். எனினும் மற்றோரு குடியரசுக் கட்சியின் கோட்டையான அரிசோனாவில் பைடனால் வெல்ல முடிந்திருப்பது ஆரம்பக் கட்ட தேர்தல் முடிவுகள் காட்டின.

இந்நிலையில் பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கொன்சின் மாநிலங்களின் முடிவுகள் வெளியாகி இருக்காத நிலையில் அதன் முடிவுகள் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதில் தீர்க்கமாக இருந்தது.

இதில் டிரம்ப் தனது தோல்வியை தவிர்ப்பதில் அவர் பென்சில்வேனியாவில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழல் இருந்தது. தவிர இன்னும் முடிவுகள் வெளியாகாது இருந்து ஜோர்ஜியா மற்றும் வடக்குக் கரோலினாவின் முடிவும் செல்வாக்கு செலுத்துவதாக இருந்தன.

வேட்பாளர்கள் என்ன கூறுகின்றனர்

தேர்தல் தின இரவை சுமார் 100 விருந்தினர்களுடன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் கழித்து வந்தார். அங்கு அவர் அதிகாலையில் உரையாற்றியபோது, ‘இந்தத் தேர்தலில் நாம் வெற்றியை அறிவிக்க தயாராகி இருக்கிறோம். உண்மையிலேயே இந்தத் தேர்தலில் நாம் சாதித்துள்ளோம்’ என்றார்.

எந்த ஆதாரமும் குறிப்பிடாது ‘பெரும் மோசடி இடம்பெற்றதாக’ கூறிய டிரம்ப், ‘நாம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் செல்வோம்’ என்றார்.

‘என்னைப் பொறுத்தவரை, நாங்கள் ஏற்கனவே வென்று விட்டோம். எங்களுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று டிரம்ப் பேசினார்.

மில்லியன் கணக்கான தபால் வாக்குகள் இன்னும் எண்ணப்படாத நிலையில் மோசடி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தனது சொந்த ஊரான விலிமிங்டோனில் பைடன் உரையாற்றியபோது, தமது வெற்றி பற்றி நம்பிக்கை வெளியிட்டிருந்தார். ‘நாம் சாதித்திருக்கிறோம் நாம் இருக்கும் இடம் பற்றி நல்லதாகவே உணர்கிறோம். இந்தத் தேர்தலில் நாம் வெற்றிப் பாதையில் செல்கிறோம் என்பதை இங்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்’ என்று பைடன் தெரிவித்தார்.

Thu, 11/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை