டைக்ரே படைக்கு எத்தியோப்பிய மத்திய அரசு மூன்று நாள் கெடு

எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரே தலைநகரை நோக்கி மத்திய அரசின் படை முன்னேறுவதற்கு முன் அந்நாட்டு பிராந்திய அரசு சரணடைவதற்கு பிரதமர் அபிய் அஹமது மூன்று நாள் கெடு விதித்துள்ளார்.

திரும்ப முடியாத நிலையில் இருப்பதாக டைக்ரே பிராந்திய தலைவர்களுக்கு அபிய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மலைப்பாங்கான பிராந்தியத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும் போராடுவதாக உறுதி அளித்துள்ளது.

இந்த மோதல் காரணமாக கடந்த ஒருசில வாரங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இது பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது. 500,000 மக்கள் தொகையைக் கொண்ட பிராந்திய தலைநகர் மெகெல்ஸை சுற்றிவளைத்து பீராங்கி தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்று இராணுவம் முன்னதாக எச்சரித்திருந்தது. ‘எந்த மன்னிப்பும் அளிக்கப்படமாட்டாது’ என்று இராணுவம் குறிப்பிட்டது.

எனினும் மத்திய அரச படைகளின் முன்னேற்றத்தை தமது படையால் தடுக்க முடிந்ததாக டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி தலைவர் டெப்ரெசியன் கெப்ரிமைக்கல் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தபோதும் எந்தப் பயனுமில்லை’ என்று அவர் தெரிவித்தார்.

பலம்மிக்க பிராந்திய கட்சியான டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையில் நீண்ட காலமாக மூறுகல் இருந்து வருகிறது.

கொரோனா தொற்றுக் காரணமாக பிரதமர் அபிய் கடந்த ஜூன் மாதம் தேசிய தேர்தலை ஒத்திவைத்ததை அடுத்தே இந்த பதற்றம் அதிகரித்தது. அபிய் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்று பிராந்திய அரசு கூறிவந்தது.

Tue, 11/24/2020 - 14:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை