கருந்துளை கண்டுபிடிப்புகளுக்காக மூவருக்கு நோபல் பரிசு அறிவிப்பு

கருந்துளைகள் பற்றிய புரிதலுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டின் பெளதீகவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்ட் கென்சல் மற்றும் அட்ரியா கேஸ் ஆகியோர் இந்த ஆண்டின் வெற்றியாளர்கள் என்று ஸ்டொக்ஹோமில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் நோபல் பரிசுக் குழு குறிப்பிட்டது.

இந்த வெற்றியாளர்கள் 1.1 மில்லியன் டொலர் பரிசுத் தொகையை பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.

சுவீடிஷ் தொழிலதிபரும் இரசாயனவியலாளருமான அல்பிரேட் நோபல் உயிரிழப்பதற்கு ஓர் ஆண்டுக்கு முன் 1895 ஆம் ஆண்டு இந்த பரிசு அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரபஞ்சத்தில் மிக அற்புதமான பொருள் ஒன்றை கொண்டாடுவதாக இந்த ஆண்டு விருது அமைகிறது என்று பெளதீகவியல் பரிசுக் குழுவின் தலைவர் டேவிட் ஹவிலாண்ட் தெரிவித்தார்.

அல்பர்ட் ஐன்ஸ்டைனின் பொதுச் சார்புக் கோட்பாட்டின் தவிர்க்க முடியாத விளைவுகளாக கருந்துளைகள் இருப்பது என்பதை பிரிட்டனில் பிறந்த பெளதீகவியலாளர் ரொஜர் பென்ரோஸ் விளக்கினார். எமது பால்வெளி மண்டலமான பால் வீதியின் மையப்பகுதியில் இரட்சத கருந்துளை ஒன்று இருப்பதற்கான மிக உறுதியான சான்றுகளை ரெயின்ஹார்ட் கென்சல் மற்றும் அட்ரியா கேஸ் வழங்கினர்.

இதில் பெளதீகவியலுக்கான நோபல் பரிசை வெல்லும் நான்காவது பெண்ணாக அட்ரியா கேஸ் பதிவாகியுள்ளார். இதற்கு முன் 1903 இல் மேரி கியுரி, 1963இல் கொப்பர்ட் மெயர் மற்றும் 2018இல் டொன்னா ஸ்ட்ரிக்லான்ட் ஆகியோர் இந்த விருதை வென்றிருத்தனர்.

கருந்துளை என்பது அதன் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.

Wed, 10/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை