பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் இன்று

பாண்டிருப்பு திரௌபதையம் மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் இன்று நடைபெறுகிறது.  இத்தீமிதிப்பு விழாவைக் காண  நாட்டின் நாலாபாகங்களில்  இருந்தும் ஆயிரக்கணக்கான  அடியார்கள் பாண்டிருப்புக்கு  வருகை தந்துள்ளனர்.

ந்தவொரு இந்து ஆலயத்துக்கும் இல்லாத பெருமை இங்குள்ள தீக்குழிக்குள்ளது. 21அடி நீளமும் 3அடி ஆழமும், 4அடி அகலமும் கொண்ட தீக்குழியாக ஆலய தீக்குழி அமைந்துள்ளது. இத்தீயின் வேள்வியினாலே 'தீப்பள்ளயம்' என அழைக்கப்படுகின்றது. பூசாரிமார், பாண்டவர்கள், திரௌபதை சகிதம் தேவாதிகள் அனைவரும் மேனியெங்கும் மஞ்சள் பூசிக் கொண்டு ஆன்ம ஈடேற்றம் கருதி தீக்குழியில் இறங்குகின்ற காட்சி அற்புதமானதாகும்.

அரஹரா ஓசை விண்ணைப் பிளக்க உடுக்கை, சலங்கை, பறை, மங்கள வாத்தியங்கள் முழங்க அவர்கள் தீயில் இறங்கி நடப்பர். இங்கு அனைவரும் தீமிதிப்பில் ஈடுபட முடியாது. குறிப்பாக பெண்கள் தீமிதிக்க அனுமதியில்லை. ஆலய உற்சவம் ஆரம்பித்த நாட்கள் தொடக்கம் 18 தினங்கள் ஆலய வளாகத்திலே தங்கி நின்று பக்திபூர்வமாக கட்டுக்கு நின்று(பூசை வழிபாடுகளில்) அம்மனை வழிபடுபவர்கள் மாத்திரமே தீயில் இறங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள்.

600 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வருகை தந்த தாதன் எனும் மாமுனிவர் அமைத்த மகாசக்தி ஆலயமான திரௌபதை அம்மன் ஆலயத்தில் அந்த மகாமுனி வகுத்துத் தந்த விதிமுறைகளுக்கு அமையவே தீமிதிப்பு உட்பட இங்கு நடைபெறும் உற்சவங்கள் முறையாக நடைபெற்று வருகின்றன.

ஆகமம் சார்ந்த ஆகமம் சாராத வழிபாட்டு முறைகள் இங்குதான் நடைபெறுகின்றன. தீக்குழிக்கு முன்பு வைக்கப்படும் கிருஷ்ணர், அம்மன் மேடையானது பாண்டவர்கள் தீயில் இறங்கும் போது வைகுண்டம் போவதாகவே உணர்த்தி நிற்கின்றது. தீமிதிப்பு நடைபெற்றதும் தெய்வம் ஏறப் பெற்றவர்களுக்கு மோட்சம் கிடைக்கவென இங்கு சாட்டை அடி வழங்கப்படுகின்றது. இந்த அற்புதக் காட்சியினை காணவென பக்தர்கள் தவம் கிடப்பர்.

தீமிதிப்பு நிறைவு பெற்ற பின்னர். மறுநாள்(03ஆம் திகதி )சனிக்கிழமை தருமருக்கு முடிசூட்டும் வைபவம் நடைபெற்று தீக்குழிக்கு பால் வார்க்கும் சடங்குடன், இரவு அம்மனின் தெற்கு நோக்கிய ஊர்வலத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறுகின்றது. பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய உற்சவம் மகாபாரத போரையும் வாழ்வியல் தத்துவத்தையும் நினைவு கூரும் வகையிலேயுள்ளது. வாழ்க்கை ஒரு போர்க்களம், அதை தருமநெறியில் வாழ்ந்தால் மோட்சநிலை கைகூடும் என்பதே இங்கு நடைபெறும் தீமிதிப்பின் தத்துவமாகும்.

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 15 ஆம் திகதி திருக்கதவு திறத்தல், கொடியேற்றம் ஆகியவற்றுடன் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.

ஒக்டோபர் 02 ஆம் மாலை திகதியான இன்று தீமிதிப்பு வைபவத்தையடுத்து, 03 ஆம் திகதி தருமருக்கு முடிசூட்டல், தீக்குழிக்கு பால்வார்க்கும் சடங்கு ஆகியவற்றுடன் உற்சவம் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

செ.துஜியந்தன்...

(பாண்டிருப்பு தினகரன் நிருபர்)

 

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை