இந்திய மகளிர் கிரிக்ெகட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்

ஐ.பி.எல் தொடரின் ஓர் அங்கமாக நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பெண்களுக்கான செலெஞ்ச் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நிறைவடைந்தவுடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 13ஆவது ஐ.பி.எல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நவம்பர் 3ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளதுடன், நவம்பர் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை 3 அணிகள் கலந்து கொள்ளும் பெண்களுக்கான ஐ.பி.எல் தொடர் நடைபெறவுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ள இப்போட்டித் தொடரானது கொவிட்-−19 பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

குறித்த தொடர் நிறைவடைந்தவுடன் ஹர்மன் பிரீத், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கான சுற்றுப்பயணத்துக்காக நேரடியாக கொழும்பை வந்தடையவுள்ளனர். இதன்படி, இலங்கை அரசாங்கத்தின் கொவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஏற்ப இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

அதன்பிறகு, ஐ.சி.சி இன் மகளிருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் கீழ் 3 ஒருநாள் மற்றும் 3 ரி 20 போட்டிகளைக் கொண்ட தொடர்களில் இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கான சுற்றுப்பயணம் தொடர்பில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் அணித் தலைவி மிதாலி ராஜ் கருத்து வெளியிடுகையில்,

”பெண்களுக்கான ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்த பிறகு இந்திய மகளிர் அணி, இலங்கை செல்ல அதிக வாய்ப்புள்ளது. சமீபத்தில் தனிமைப்படுத்தல் நாட்கள் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் இரத்து செய்யப்பட்டது. ஆனால், இந்திய மகளிர் அணியின் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்கும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, கடந்த ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவிருந்தது. எனினும் கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தொடரானது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 10/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை