ஒக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பு மருந்து சோதனை இடைநிறுத்தம்

சோதனைக்கு உட்பட்ட ஒருவருக்கு சுகவீனம்

இறுதிக் கட்ட பரிசோதனையில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா நிறுவனம் மேம்படுத்திய கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தின் சோதனை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் அந்த மருந்துக்கான சோதனையில் பங்கேற்ற ஒருவர் சுகவீனமுற்றதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“விளக்க முடியாத சுகவீனம்” ஒன்று காரணமாக வழக்கமான இடைநிறுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டது என்று அஸ்ட்ராசெனிகா குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தடுப்பு மருந்தின் முன்னேற்றம் பற்றி உலகம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

சர்வதேச அளவில் பல தடுப்பு மருந்துகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றபோதும் அஸ்ட்ராசெனிகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இந்தத் தடுப்பு மருந்து சோதனை முன்னணியில் இருந்து வருகிறது.

இந்தத் தடுப்பு மருந்து 1ஆம் மற்றும் 2ஆம் கட்ட சோதனைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருக்கும் நிலையில் கொரோனாவுக்கு எதிராக சந்தைக்கு வரும் முதலாவது தடுப்பு மருந்தாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்ப்பு உள்ளது.

தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை என்பது பொதுவாக பல ஆண்டு காலம் ஆயிரக்கணக்கான பேர் மீது செய்யப்படும்.

தற்போது அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த சுமார் 30,000 பங்கேற்பாளர்களுடன் அண்மைய வாரங்களில் இந்தத் தடுப்பு மருந்து மூன்றாவது கட்ட சோதனையை நடத்தி வருகிறது.

“பெரிய அளவான சோதனையில் ஒருவேளை சுகவீனங்கள் ஏற்படக்கூடும். ஆனால் இதனை சுயாதீனமான முறையில் மதிப்பீடு செய்து பார்ப்பது அவசியம்” என்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இன்னும் சில நாட்களில் பரிசோதனை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அந்த மருந்தைப் பயன்படுத்த வெள்ளை மாளிகை திட்டமிட்டதாய்ச் செய்தி வெளியாகியுள்ளது.

மருந்தை விரைவாகத் தயாரிக்க குறுக்குவழிகளைக் கையாளப் போவதில்லை என அஸ்ட்ராசெனிகா உள்ளிட்ட 6 மருந்து நிறுவனங்கள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

அரசியல் நெருக்குதல்களுக்கு இடம்கொடுக்காமல், அந்த ஒப்பந்தத்திற்குக் கட்டுப்படப்போவதாய் அவை உறுதியளித்தன.

உலகளவில் சுமார் 180 தடுப்பு மருந்து தயாரிப்பாளர்கள் தங்கள் தடுப்பூசியை பரிசோதனை செய்துவருவதாகவும், ஆனால், இதில் யாரும் இன்னும் மருத்துவ பரிசோதனை கட்டத்தை முடிக்கவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தடுப்பு மருந்தை பாதுகாப்பாக பரிசோதிக்க அதிக காலம் எடுக்கும் என்பதால் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒரு தடுப்பு மருந்து இந்தாண்டு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்த ஆரம்பித்துள்ளன. ஆனால், இந்த தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனை நிலையில் இருப்பதாகவே உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

இந்த அஸ்ட்ராசெனிகா தடுப்பு மருந்து இரட்டைத் தடுப்பு கூறுகள் கொண்டது என்று கூறப்படுகிறது. அதாவது வைரஸ் எதிர்ப்பான்களை உற்பத்தி செய்வதோடு வைரஸ் அழிப்பு செல்களையும் உற்பத்தி செய்கிறது என்று ஆரம்பக்கட்டத்தில் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Thu, 09/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை